சேலம் கலெக்டர் அலுவலகத்தில் குடிநீர் புகார்களை தெரிவிக்க தனிப்பிரிவு தொடக்கம்
சேலம் கலெக்டர் அலுவலகத்தில் குடிநீர் புகார்களை தெரிவிக்க தனிப்பிரிவு தொடங்கப்பட்டுள்ளது என்று கலெக்டர் ரோகிணி தெரிவித்தார்.
சேலம்,
மத்திய அரசாங்கத்தின் புள்ளியியல் மற்றும் திட்ட செயலாக்கம் அமைச்சகத்தின் மூலம் பொருளாதார கணக்கெடுப்பு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகிறது. இந்த நிலையில் 7-வது பொருளாதார கணக்கெடுப்பு செல்போன் செயலி மூலம் பொதுசேவை மையங்களினால் தேர்ந்தெடுக்கப்பட்ட கணக்கெடுப்பாளர்களால் நடத்தப்படுகிறது.
இதில் அனைத்து சிறு குறு மற்றும் பெரும் தொழிற் சாலைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் நடைபாதை கடைகள் உள்ளிட்டவை கணக்கெடுக்கப்படுகிறது. இந்த பணியில் ஈடுபடுபவர்களுக்கான பயிற்சி முகாம் நேற்று சேலத்தில் நடைபெற்றது. இந்த பயிற்சியில் மாவட்ட கலெக்டர் ரோகிணி கலந்து கொண்டு பேசினார்.
இதையடுத்து கலெக்டர் ரோகிணி நிருபர்களிடம் கூறியதாவது:-
சேலம் மாவட்டத்தில் குடிநீர் சரியான முறையில் வினியோகம் செய்யப்படுகிறதா? என்பதை தினமும் கண்காணித்து வருகிறோம். இதற்காக வார்டு வாரியாக தனி அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும் சேலம் கலெக்டர் அலுவலகத்தில் குடிநீர் வினியோகம் குறித்து புகார் தெரிவிக்க தனிப்பிரிவு தொடங்கி உள்ளோம்.
அந்த பிரிவுக்கு 28 புகார்கள் வரை வந்துள்ளன. இவற்றை தீர்ப்பதற்காக தனி குழு அமைத்துள்ளோம். கிராம பஞ்சாயத்துகள், டவுன் பஞ்சாயத்துகளில் வாரத்திற்கு 3 நாட்களும், மாநகராட்சியில் 2 நாட்களுக்கு ஒருமுறையும் காவிரி நீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதுதவிர ஆழ்துளை கிணறு மூலம் தினமும் தண்ணீர் வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
குடிநீர் தொடர்பாக பிரச்சினை ஏற்படும் ஒரு சில இடங்களுக்கு சென்று பார்த்த போது பொதுமக்கள் சிலர் மோட்டாரை பயன்படுத்தி தவறான முறையில் அதிகமான நீரை உறிஞ்சி சேமிக்கின்றனர். இதனால் கடைகோடி மற்றும் மேடு பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு குடிநீர் கிடைப்பதில்லை.
இதனால் மோட்டார் மூலம் தண்ணீர் உறிஞ்சுவதை தவிர்க்க வேண்டும். குடிமராமத்து பணிகளின் கீழ் ஏரி, குளங்கள் தூர்வாரவும் மற்றும் கால்வாய் ஆக்கிரமிப்புகளை அகற்றவும் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
முகாமில் துணை இயக்குனர் குப்புசாமி, தேசிய மாதிரி ஆய்வு கண்காணிப்பாளர் அர்ஜூனன், பொதுசேவை மேலாளர் கண்ணன்பாபு, ஒருங்கிணைப்பாளர் ரம்யா ஆகியோர் கணக்கெடுப்பாளர்களுக்கு பயிற்சி அளித்தனர்.
Related Tags :
Next Story