விவசாய கிணற்றில் இருந்து தண்ணீரை எடுத்து விற்பதா? டிராக்டர்களை சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டம்


விவசாய கிணற்றில் இருந்து தண்ணீரை எடுத்து விற்பதா? டிராக்டர்களை சிறைபிடித்து கிராம மக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 21 Jun 2019 4:00 AM IST (Updated: 20 Jun 2019 10:45 PM IST)
t-max-icont-min-icon

தாரமங்கலம் அருகே கிணற்றில் இருந்து தண்ணீரை எடுத்து விற்பனை செய்வதை எதிர்த்து கிராம மக்கள் டிராக்டர்களை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தாரமங்கலம், 

சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே உள்ள அழகுசமுத்திரம் பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இந்த பகுதியை சேர்ந்த 3 விவசாயிகள் தங்களது தோட்டத்தில் உள்ள விவசாய கிணற்றில் இருந்து தண்ணீரை டிராக்டர் மூலம் எடுத்து சென்று வெளியிடங்களில் விற்பனை செய்து வந்தனர்.

மேலும் ஆழ்துளை கிணறு மூலமும் தண்ணீரை எடுத்து விற்பனை செய்து வந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக அழகுசமுத்திரம் பகுதியில் பஞ்சாயத்து ஆழ்துளை கிணறு மற்றும் இதர ஆழ்துளை கிணறுகளும், விவசாய கிணறுகளும் வறண்டன. இதன் காரணமாக அந்த பகுதியில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து அழகுசமுத்திரம், மாரமங்கலத்துப்பட்டி, புதுமாரியம்மன் கோவில் மற்றும் எம்.ஜி.ஆர்.காலனி உள்பட சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த கிராம மக்கள் தண்ணீரை எடுத்து விற்பனை செய்ய எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் இது தொடர்பாக அதிகாரிகளிடம் புகார் கொடுத்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று காலை வழக்கம் போல அந்த விவசாயிகள் கிணறுகளில் இருந்து 2 டிராக்டர்களில் தண்ணீர் எடுத்து விற்பனைக்கு கொண்டு சென்றனர்.

இதைப்பார்த்த கிராமமக்கள் அந்த 2 டிராக்டர்களை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கூறுகையில், தண்ணீரை உறிஞ்சி எடுத்து விற்பனை செய்வதால் எங்கள் பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது. மேலும் தண்ணீரை ஏன் விற்பனை செய்கிறீர்கள்? என்று கேட்டால், தண்ணீர் இல்லாதவர்களுக்கு இலவசமாக கொடுக்கிறோம் என்கிறார்கள். அப்படியென்றால் எங்களுக்கு கொடுக்க வேண்டியது தானே, அதிகாரிகளையும், எங்களையும் ஏமாற்றி விட்டு, தண்ணீரை விற்பனை செய்கிறார்கள். எனவே தண்ணீர் விற்பனையை தடுத்து நிறுத்த வேண்டும் என்றனர்.

இது பற்றிய தகவல் அறிந்ததும் தாரமங்கலம், இரும்பாலை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது கிராம மக்கள் போலீசாரிடம் கூறுகையில், கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக 3 பேரும் தண்ணீரை வெளியூர்களுக்கு விற்பனை செய்து வருகிறார்கள். இதனால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளது.

தண்ணீருக்கு திண்டாடும் இந்த நேரத்தில் தினமும் ஒரு டிராக்டரில் 6 ஆயிரம் லிட்டர் வீதம் டிராக்டர்களில் தண்ணீரை கொண்டு சென்று விற்பனை செய்கிறார்கள். இதனால் ஆழ்துளை கிணறுகள் வறண்டு, குடிக்க தண்ணீர் இன்றி சிரமப்படுகிறோம் என்று தெரிவித்தனர்.

இதையடுத்து போலீசார் தண்ணீர் விற்பனை செய்து வந்த 3 பேரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அவர்கள், இனிமேல் குடிநீரை எடுத்து விற்பனை செய்வது இல்லை என்று போலீசாரிடம் உறுதி கூறினர். இதில் சமாதானம் அடைந்த கிராம மக்கள் சிறைபிடித்த 2 டிராக்டர்களை விடுவித்து, அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story