சமையல் கியாஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் நாமக்கல்லில் நடந்த கூட்டத்தில் முடிவு


சமையல் கியாஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் நாமக்கல்லில் நடந்த கூட்டத்தில் முடிவு
x
தினத்தந்தி 21 Jun 2019 3:30 AM IST (Updated: 20 Jun 2019 10:53 PM IST)
t-max-icont-min-icon

அனைத்து வாகனங்களுக்கும் வேலைவாய்ப்பு வழங்க வலியுறுத்தி வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவது என நாமக்கல்லில் நடந்த சமையல் கியாஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

நாமக்கல், 

தென்மண்டல பல்க் எல்.பி.ஜி.டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் நாமக்கல்லை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இச்சங்கத்தில் உள்ள சமையல் கியாஸ் டேங்கர் லாரிகள் பொதுத்துறை ஆயில் நிறுவனங்களிலிருந்து சிலிண்டரில் கியாசை நிரப்பும் மையங்களுக்கு (பாட்லிங் பிளாண்டுகளுக்கு) சமையல் கியாசை கொண்டுசெல்லும். இதற்கான டெண்டர் ஒப்பந்தம் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை போடப்பட்டு வந்தது. தற்போது அது 5 ஆண்டுகளாக மாற்றப்பட்டுள்ளது.

அவ்வகையில் கடந்த ஆண்டு அக்டோபர் 31-ந்தேதியுடன் பழைய டெண்டர் ஒப்பந்தம் முடிவடைந்தது. புதிய ஒப்பந்தத்தில் அந்தந்த மாநில லாரிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்பது உள்ளிட்ட நிபந்தனைகள் இடம் பெற்றிருந்தன. இதனால் சங்கத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சுமார் 750 டேங்கர் லாரிகளுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை.

இதற்கிடையே நேற்று இதுதொடர்பாக விவாதிக்க நாமக்கல்லில் சங்கத்தின் அவசர பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்கத்தலைவர் பொன்னம்பலம் தலைமை தாங்கினார். கூட்டத்தில் அனைத்து வாகனங்களுக்கும் வேலைவாய்ப்பு கிடைக்க உடனடியாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடவேண்டும் என பெரும்பாலான உறுப்பினர்கள் தெரிவித்தனர்.

இதற்கிடையே உறுப்பினர்கள் சிலர் சங்க பொறுப்பாளர் ஒருவரே சங்கத்தின் விதிமுறைகளுக்கு மாறாக தனது வாகனத்தை எஸ்.டி.கோட்டாவுக்கு மாற்றம் செய்துள்ளார். அவர் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பி நிர்வாகிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது.

இதையொட்டி உறுப்பினர்கள் சிலர் மேடைக்கு முன்பு வந்து நிர்வாகிகளுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். அப்போது பேசிய தலைவர் பொன்னம்பலம் உறுப்பினர் ஒருவரை பார்த்து நீ ஓட்டுபோட்டு நான் வெற்றிபெறவில்லை என கூறியதால், கூட்டத்தில் மேலும் கூச்சல், குழப்பம் அதிகமானது.

இறுதியாக சங்கத்தின் செயலாளர் கார்த்திக் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

2018-2023-ம் ஆண்டுக்கான டெண்டரில் புதிய விதிமுறைகள் கொண்டு வரப்பட்டதால், அனைத்து வண்டிகளுக்கும் வேலைவாய்ப்பு கிடைக்கவில்லை. கடந்தஆண்டு டெண்டர் அறிவித்தபோதே எண்ணெய் நிறுவனங்கள் கொண்டுவந்த விதிமுறைகளை எதிர்த்தோம். ஆனால் வேறுவழியின்றி டெண்டரில் கலந்துகொண்டு, வாகனங்களை பதிவுசெய்தோம். அப்போது எண்ணெய் நிறுவன அதிகாரிகள், எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வாகனங்களை எடுத்துக்கொள்கிறோம் என உறுதிஅளித்ததின் பேரில் கடந்த 8 மாதங்களாக 700-க்கும் மேற்பட்ட வாகனங்களை இயக்காமல் நிறுத்தி வைத்திருந்தோம். ஆனால் தற்போது வங்கியில் வாங்கப்பட்ட கடனை கட்டமுடியாததால் உறுப்பினர்கள் இருப்பதால், ஏற்கனவே இயங்கி கொண்டிருக்கும் சமையல் கியாஸ் டேங்கர் லாரிகளை இயக்காமல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட கூட்டத்தில் முடிவு செய்துள்ளோம். எந்த தேதியில் இருந்து வேலைநிறுத்தத்தில் ஈடுபடஉள்ளோம் என்பது பின்னர் அறிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் டெண்டர் விதிமுறைகளை பின்பற்றாத பொறுப்பாளர் மற்றும் உறுப்பினர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும் முடிவு செய்யப்பட்டது.

Next Story