வேலூரில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4 டன் குட்கா பறிமுதல்


வேலூரில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4 டன் குட்கா பறிமுதல்
x
தினத்தந்தி 21 Jun 2019 4:15 AM IST (Updated: 20 Jun 2019 10:59 PM IST)
t-max-icont-min-icon

வேலூரில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 4 டன் குட்காவை சென்னை போலீசார் பறிமுதல் செய்தனர்.

வேலூர், 

சென்னை ஒருங்கிணைந்த குற்ற நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு வேலூர் நகரில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா ேபான்ற புகையிலை பொருட்கள் ரகசியமாக கடத்தி விற்கப்படுவதாக தகவல் கிடைத்தது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி தலைமையிலான 6 பேர் கொண்ட குழுவினர் நேற்று சைதாப்பேட்டை பகுதியில் உள்ள வீடுகளில் சோதனை நடத்தினர்.

அப்போது பி.டி.சி. ரோடு முகமதுசேக் பங்களா தெருவில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் சோதனை மேற்கொண்டனர். அதில் ஒரு வீட்டின் மாடியில் சிறிய அளவிலான குடோன் இருந்ததை போலீசார் பார்த்தனர். அதை திறந்து பார்த்தபோது அதில் 70 மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. அதை திறந்து பார்த்தபோது குட்கா போன்ற புகையிலை பொருட்கள் இருந்தது தெரியவந்தது. அவற்றின் மொத்த எடை 4 டன் ஆகும். மேலும் அங்கு குட்கா தயாரிக்க பயன்படுத்தப்படும் 28 லிட்டர் கெமிக்கல் இருந்தது. இவை அனைத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை மேற்கொண்டார்.

இதையடுத்து குட்கா பொருட்களை பதுக்கி வைத்ததாக அந்த வீட்டின் உரிமையாளர் முகமது இப்ராகீம் மற்றும் அதே பகுதியை சேர்ந்த அப்சல்பாஷா ஆகியோரை போலீசார் பிடித்து, குட்கா யாரிடம் இருந்து வாங்கப்பட்டது என்பது உள்பட பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேலூரில் 4 டன் குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story