தாளவாடி அருகே குடிநீர் கிடைக்காமல் கிராமமக்கள் கடும் அவதி


தாளவாடி அருகே குடிநீர் கிடைக்காமல் கிராமமக்கள் கடும் அவதி
x
தினத்தந்தி 21 Jun 2019 4:30 AM IST (Updated: 20 Jun 2019 11:18 PM IST)
t-max-icont-min-icon

தாளவாடி அருகே குடிநீர் கிடைக்காமல் கிராம மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

தாளவாடி, 

தாளவாடி அருகே பைனாபுரம் ஊராட்சிக்கு உள்பட்டது பொதை கிராமம். இங்கு 1000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இவர்களின் முக்கிய தொழில் ஆடு, மாடு மேய்ப்பதாகும். மேலும் சிலர் விவசாய கூலிவேலைக்கும் சென்று வருகிறார்கள்.

பைனாபுரம் ஊராட்சி சார்பில் பொதை கிராம மக்களின் குடிநீர் தேவைக்காக ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டது. இங்கிருந்து அந்த பகுதி மக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக இந்த பகுதிக்கு சரியாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் பொதை கிராம மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

இதுகுறித்து அந்த கிராம மக்கள் கூறியதாவது:-


ஆழ்குழாய் கிணறு அமைத்து அதில் இருந்து மேல்நிலை குடிநீர் தொட்டியில் தண்ணீர் நிரப்பி அங்கிருந்து அனைத்து வீதிகளுக்கும் பொதுகுழாய் மூலம் குடிநீர் வழங்கினர்.

ஆனால் கடந்த 1வாரமாக குடிநீர் குறைவாக தான் கிடைக்கிறது. ஒருவர் 4 குடம் முதல் 5 குடம் வரை தான் பெற முடிகிறது. இதனால் குடிநீருக்காக பல கிலோ மீட்டர் தூரம் அலையவேண்டிய நிலை உள்ளது.

பக்கத்தில் உள்ள தோட்டங்களுக்கு நடந்து சென்று குடிநீர் எடுத்து வந்து பயன்படுத்தி வருகிறோம். இதனால் கூலி வேலைக்கு செல்பவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். உரிய நேரத்தில் வேலைக்கு செல்ல முடிவதில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொதை கிராமத்துக்கு முறையாக குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு பொதுமக்கள் தெரிவித்தனர்.

இதுகுறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள், ‘போதிய மழை பெய்யாததால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து ஆழ்குழாய் கிணற்றில் தண்ணீர் வற்ற தொடங்கிவிட்டது.

இதனால் வீதிகளில் உள்ள குழாய்களுக்கு தண்ணீர் திறந்துவிடுவது நிறுத்தப்பட்டுள்ளது விரைவில் குடிநீர் வினியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று கூறினர்.

Next Story