ஆண்டிப்பட்டி, பெரியகுளம் தொகுதிகளில், குடிநீர் தட்டுப்பாட்டை தடுக்க போர்க்கால நடவடிக்கை
ஆண்டிப்பட்டி, பெரியகுளம் சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாட்டை தடுக்க போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டரிடம், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மனு அளித்தனர்.
தேனி,
தேனி மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கம்பம் ராமகிருஷ்ணன் தலைமையில், ஆண்டிப்பட்டி எம்.எல்.ஏ. மகாராஜன், பெரியகுளம் எம்.எல்.ஏ. சரவணக்குமார், போடி முன்னாள் எம்.எல்.ஏ. லட்சுமணன் மற்றும் நிர்வாகிகள் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் மாவட்ட கலெக்டர் பல்லவி பல்தேவை சந்தித்து பேசினர். அப்போது தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் இருவரும் கலெக்டரிடம், தனித்தனி கோரிக்கை மனுவை அளித்தனர்.
அந்த மனுக்களில் கூறப்பட்டுள்ளதாவது:-
சட்டமன்ற உறுப்பினராக பதவி ஏற்ற பின்பு ஆண்டிப்பட்டி, பெரியகுளம் பகுதிகளில் அனைத்து கிராமங்களுக்கும் சென்று மக்களை சந்தித்து வருகிறோம். அப்போது மக்கள் கோரிக்கை மனுக்கள் அளித்தனர். வாய்மொழியாகவும் கோரிக்கைகளை தெரிவித்தனர். அவற்றை தொகுத்து மனுவாக அளித்துள்ளோம்.
தொகுதிக்கு உட்பட்ட அனைத்து கிராமங்களிலும் குடிநீர் பற்றாக்குறை மிக கவலைக்கிடமாக இருக்கிறது. பல்வேறு கிராமங்களில் வாழும் விவசாயிகள், கூலித்தொழிலாளர்கள், தாய்மார்கள் ஒரு குடம் தண்ணீரை ரூ.5 கொடுத்தும், டேங்கர் லாரி மூலமும் வாங்கி பயன்படுத்த வேண்டிய அவலம் நிலவுகிறது. கூலியாக கிடைக்கும் பணத்தில் விலைக்கு தண்ணீர் வாங்கியது மட்டுமில்லாமல் பாதுகாப்பு இல்லாத, சுத்திகரிக்கப்படாத தண்ணீரை பயன்படுத்துவதால் பல்வேறு தொற்றுநோய்கள் பரவும் நிலைமை உள்ளது.
அத்துடன், சுகாதார வசதி, பெண்கள் கழிப்பிட வசதி, சாலை வசதி, தெரு விளக்கு, சாக்கடை வசதி போன்ற அடிப்படை வசதிகள் இல்லாமலும் மக்கள் அல்லல்படுகின்றனர். எனவே, குடிநீர் தட்டுப்பாடு உள்ளிட்ட பிரச்சினைகள் மீது போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து மக்களின் துன்பத்தை போக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story