வீடு கட்டி தருவதாக கூறி ரூ.12 லட்சம் மோசடி - தம்பதி உள்பட 6 பேர் மீது வழக்கு
வீடு கட்டி தருவதாக கூறி ரூ.12 லட்சம் மோசடி செய்த தம்பதி உள்பட 6 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
பெரியகுளம்,
மதுரை அருகே உள்ள திருமங்கலத்தை சேர்ந்தவர் சீனிவாசன். இவருக்கு தேனி அருகே உள்ள முல்லை நகரை சேர்ந்த திவாகர், அவருடைய மனைவி கற்பகம் ஆகியோருடன் அறிமுகம் ஏற்பட்டது. அப்போது அவர்கள் தாங்கள் ரியல் எஸ்டேட் தொழில் செய்வதாகவும், தங்களுக்கு புதிதாக வீடு கட்ட வேண்டுமானால் உதவி செய்கிறோம் என்று சீனிவாசனிடம் கூறினர்.
மேலும் பெரியகுளம் அருகே உள்ள எண்டப்புளி புதுப்பட்டியில் தங்களுக்கு நிலம் உள்ளதாகவும், அங்கு வீடு கட்டி தருவதாகவும் தம்பதியினர் தெரிவித்துள்ளனர். இதை உண்மை என்று நம்பிய சீனிவாசனும், தம்பதியின் உதவியை நாடினார். அப்போது தம்பதியினர் வீடு கட்ட ரூ.25 லட்சம் செலவாகும் என்று தெரிவித்துள்ளனர். மேலும் முன் பணமாக ரூ.12 லட்சம் சீனிவாசனிடம் இருந்து தம்பதியினர் பெற்றனர்.
ஆனால் நீண்ட நாட்கள் ஆகியும் தம்பதியினர் வீடு கட்டிக் கொடுக்கவில்லை. அப்போது தான் அவர்கள் வீடு கட்டி தருவதாக கூறி மோசடியில் ஈடுபட்ட விவரம் சீனிவாசனுக்கு தெரியவந்தது. இதனால் ஏமாற்றம் அடைந்த சீனிவாசன் தனது பணத்தை திருப்பி தருமாறு தம்பதியிடம் கேட்டுள்ளார்.
இதையடுத்து சீனிவாசனுக்கு செல்போன் மூலம் தொடர்பு கொண்ட திவாகர் எ.புதுப்பட்டிக்கு வந்து பணத்தை பெற்று செல்லுமாறு தெரிவித்துள்ளார். இதையடுத்து எ.புதுப்பட்டிக்கு வந்த சீனிவாசனை திவாகர் மற்றும் சிலர் சேர்ந்து கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து பெரியகுளம் போலீஸ் நிலையத்தில் சீனிவாசன் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் திவாகர், அவருடைய மனைவி கற்பகம் உள்பட 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story