உடுமலை பஸ் நிலையம் அருகில் சிக்னல் இல்லாத ரவுண்டானா அமைக்கும் பணி தீவிரம்


உடுமலை பஸ் நிலையம் அருகில் சிக்னல் இல்லாத ரவுண்டானா அமைக்கும் பணி தீவிரம்
x
தினத்தந்தி 21 Jun 2019 4:00 AM IST (Updated: 21 Jun 2019 12:16 AM IST)
t-max-icont-min-icon

உடுமலை பஸ் நிலையம் அருகில் சிக்னல் இல்லாத ரவுண்டானா அமைக்கும் தீவிரமாக நடந்து வருகிறது. போக்குவரத்து மாற்றம் செய்யாததால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகிறார்கள்.

போடிபட்டி, 

அதிக அளவில் வாகன போக்குவரத்து கொண்ட கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உடுமலை நகரம் அமைந்துள்ளது. இதனால் தினசரி அதிக அளவிலான வாகனங்கள் நகரைக்கடந்து செல்கின்றன. மேலும் உடுமலை நகரில் பெருகி வரும் வாகனப்போக்குவரத்தால் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது.அதிலும் குறிப்பாக பஸ் நிலையம் அருகில் தினசரி சந்தை உள்ளிட்ட முக்கிய இடங்கள் உள்ளதால் போக்குவரத்து நெரிசல் தொடர்கதையாகவே உள்ளது.

இந்தநிலையில் உடுமலை பஸ் நிலையம் அருகில் ராஜேந்திரா ரோடு பைபாஸ் ரோடு பழனி ரோடு பொள்ளாச்சி ரோடு சந்திப்பு பகுதியில் சிக்னல் இல்லாத ரவுண்டானா அமைக்கத்திட்டமிடப்பட்டது.அதற்கான ஆய்வுப்பணிகள் முடிந்து ரூ. 1 கோடியே 10 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. இதன்மூலம் வாகன ஓட்டிகள் சிக்னலுக்காக காத்திருக்க அவசியமில்லாமல் அந்த பகுதியை கடந்து செல்ல முடியும். நிதி ஒதுக்கப்பட்டு பல மாதங்கள் கடந்த நிலையில் தற்பொழுது ரவுண்டானா அமைப்பதற்கான முதற்கட்ட பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதற்கென ராஜேந்திரா ரோடு பிரிவில் உள்ள கட்டணக்கழிப்பிடத்தின் சுற்றுச்சுவர் இடிக்கப்பட்டு அந்த பகுதியில் பொக்லைன் எந்திரங்கள் மூலம் பள்ளம் தோண்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கென அந்த பகுதியில் தற்காலிக தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது.

ஆனால் வாகனங்கள் செல்வதற்கு மாற்று ஏற்பாடுகள் செய்யப்படாததால் வாகனப்போக்குவரத்து நிறைந்த காலை மற்றும் மாலை நேரங்களில் சிக்னலுக்காக வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது. ரோட்டின் நடுவிலுள்ள மையத்தடுப்புகளை சிறிது தூரம் அகற்றி சிறிய அளவிலான மாறுதல் செய்தாலே வாகனங்கள் எளிதாக அந்த பகுதியைக் கடந்து செல்ல முடியும். மேலும் ராஜேந்திரா ரோட்டிற்கு திரும்பும் வாகன ஓட்டிகள் முறையாக வழிகாட்டப்படாததால் எதிர் வரிசையில் தாறுமாறாகச் செல்லும் நிலை உள்ளது.இதனால் விபத்துகள் ஏற்படும் அபாயம் உள்ளது.

எனவே மிக முக்கிய தேசிய நெடுஞ்சாலையான இந்த பகுதியில் போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் முறையாக திட்டமிடுதலுடன் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது வாகன ஓட்டிகளின் கோரிக்கையாக உள்ளது.

Next Story