வக்கீல்கள் நீதிமன்றத்தை ஒருபோதும் தவறாக வழிநடத்தக்கூடாது சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி அறிவுரை


வக்கீல்கள் நீதிமன்றத்தை ஒருபோதும் தவறாக வழிநடத்தக்கூடாது சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி அறிவுரை
x
தினத்தந்தி 21 Jun 2019 4:30 AM IST (Updated: 21 Jun 2019 12:28 AM IST)
t-max-icont-min-icon

நீதிமன்றத்தை ஒருபோதும் தவறாக வழிநடத்தக்கூடாது என்று புதிய வக்கீல்களுக்கு, சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி இந்திரா பானர்ஜி அறிவுரை வழங்கினார்.

சென்னை,

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சிலில், சட்டப்படிப்பை முடித்தவர்கள் வக்கீலாக பதிவு செய்கின்றனர். இவர்களை வக்கீலாக பதிவு செய்ய அனுமதிப்பதற்கு முன்பு, அந்த நபர் குற்ற பின்னணியில் உள்ளவரா? என்பதை போலீஸ் மூலம் பார் கவுன்சில் சரிபார்த்து வருகிறது.

இந்த நிலையில், ஆன்லைன் மூலம் விண்ணப்பம் செய்து வக்கீலாக பதிவு செய்யும் முறையையும், சம்பந்தப்பட்ட நபர் குறித்து, குற்ற பின்னணி குறித்து ஆன்லைன் மூலமாகவே போலீஸ் சரிபார்க்கும் முறையையும் தமிழ்நாடு பார் கவுன்சில் உருவாக்கியுள்ளது.

இந்த ஆன்லைன் சேவைகளை சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி இந்திரா பானர்ஜி, சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி வி.கே.தஹில்ரமானி ஆகியோர் தொடங்கி வைத்தனர். அப்போது, புதிய வக்கீல்களாக பதிவு செய்யும் 826 பேருக்கு, சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி இந்திரா பானர்ஜி உறுதிமொழி வாசித்து, புதிய வக்கீல்கள் பதிவை நடத்திவைத்தார். பின்னர், நீதிபதி இந்திரா பானர்ஜி பேசியதாவது:-

அறிவார்ந்த என அழைக்கும் ஒரே தொழில் வக்கீல் தொழில்தான். இந்திய ஜனநாயக தூண்களில், நீதித்துறை மிக முக்கியமானது. மக்களின் அடிப்படை உரிமைகளை உறுதி செய்வது நீதித்துறைதான். அதில், வக்கீல்களின் பங்கு மிகவும் முக்கியமானது. வக்கீல்கள் நீதிமன்றத்தின் அதிகாரிகள். அதனால், நீதிமன்றத்தை ஒருபோதும் தவறாக வழிநடத்தக்கூடாது. வழக்கில் வாதாடுவதற்கு முன்பு வழக்கு விவரங்களை நன்றாக படித்து வக்கீல்கள் தயாராக வேண்டும். ஏனென்றால், நீதிபதிகளும் மனிதர்கள்தான், ஒரே வாதத்தை மீண்டும் மீண்டும் வைத்தால் எப்படி கேட்கமுடியும்?

புதிதாக வக்கீல்களாக பதிவு செய்தவர்களில் பெண்கள் அதிகம் உள்ளர்கள். நீதித்துறை வரலாற்றில், சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதி பதவியை இதுவரை பெண் அலங்கரிக்கவில்லை. எனவே, இந்த கூட்டத்தில் இருக்கும் பெண் வக்கீல்களில் ஒருவர் அப்பதவிக்கு வரவேண்டும். நாம் (வக்கீல்கள்) நடத்தும் வழக்குகளால், அப்பாவி ஒருவர்கூட பாதிக்கக்கூடாது என்பதை மனதில் கொள்ளுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.

சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி வி.கே.தஹில்ரமானி பேசுகையில், ‘வக்கீல் என்பவர் நீதியின் படைவீரராகவும், உரிமைகளின் பாதுகாவலராகவும் இருக்க வேண்டும். வழக்கு தொடர முடியாதவர்களுக்கு இலவசமாக சேவை செய்யவேண்டும். அவர்களுக்கு தீர்வை மட்டுமல்லாமல், மன அமைதியும் கிடைக்க வழி செய்யவேண்டும். வக்கீல் தொழில் பணம் ஈட்டும் தொழில் அல்ல’ என்றார்.

ஐகோர்ட்டு மூத்த நீதிபதி எஸ்.மணிக்குமார் பேசும்போது, ‘வக்கீல் தொழிலுக்கு வந்துள்ள நீங்கள், எப்படி வாதாடவேண்டும் என்பதை மூத்த வக்கீல்கள் வாதிடும்போது உன்னிப்பாக கவனிக்கவேண்டும். வாதாடும் நடைமுறை தெரிந்திருப்பது மிகவும் முக்கியம். வாழ்க்கை முழுவதும் கற்றுக்கொண்டே இருக்கவேண்டும். கற்பதை நிறுத்தாதீர்கள்’ என்று அறிவுரை கூறினார்.

ஐகோர்ட்டு மூத்த நீதிபதி என்.கிருபாகரன் பேசுகையில், ‘போலீஸ்காரர்கள் திறம்பட பணியாற்றாவிட்டால் சட்டம்- ஒழுங்கு கெட்டுவிடும். வக்கீல்கள் சரியாக பணியாற்றாவிட்டால் நீதிபரிபாலனம் பாதிக்கும். நீதி பரிபாலனம் நம் நாட்டில் பாராட்டும் அளவுக்கு இல்லை. ஏன் என்றால், வழக்குகளை தீர்வு காண்பதில் அதிக தாமதம் ஏற்படுகிறது.

வக்கீலாக பதிவு செய்துள்ள நீங்கள், மூத்த வக்கீல்களிடம் பயிற்சி பெறவேண்டும். ஆனால், வக்கீல் தொழில் என்னவென்று தெரியாமல், கட்டப்பஞ்சாயத்து மூலம் சட்டவிரோதமாக பணம் சம்பாதிக்கின்றனர். இது புனிதமான தொழில். பணம் சம்பாதிக்கும் தொழில் இல்லை. மக்களின், உரிமைகளுக்காக பணியாற்றுங்கள். நலிந்த, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக உழைப்பை செலவிடுங்கள். கணவன்-மனைவி பிரச்சினையை போலீஸ் நிலையம் வரை இழுத்து கொண்டுவந்து விடாதீர்கள். அந்த பிரச்சினையில் இருதரப்பினரிடமும் பேசினாலே, சுமுக தீர்வு ஏற்பட்டுவிடும்’ என்று அறிவுரை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் ஏ.கே. விஸ்வநாதன் பேசுகையில், ‘புதிதாக வக்கீல் தொழிலுக்கு வந்துள்ள நீங்கள் வக்கீல் தொழிலுக்கு தேவையான தகுதிகள், திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும். தற்போதுள்ள நவீன தொழில்நுட்பத்தை இளம் தலைமுறையினர் பயன்படுத்த வேண்டும். நீதியை நிலைநாட்ட காவல்துறையும், நீதித்துறையும் இணைந்து பணியாற்ற வேண்டும்’ என்றார்.

Next Story