சேதராப்பட்டில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு அதிகாரிகளுடன் வியாபாரிகள் வாக்குவாதம்
சேதராப்பட்டில் சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்தனர்.
காலாப்பட்டு,
புதுவை நகரில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலை குறைக்க கடந்த மாதம் முக்கிய சாலைகளில் ஆக்கிரமிப்புகள் அதிரடியாக அகற்றப்பட்டன. இதன் தொடர்ச்சியாக கொம்யூன் பஞ்சாயத்து, நகராட்சி பகுதிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.
அதன்படி வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்துக்கு உட்பட்ட தொழிற்சாலைகள் நிறைந்த பகுதியான சேதராப்பட்டு - மயிலம் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வில்லியனூர் சப்-கலெக்டர் உத்தரவிட்டார். கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஆக்கிரமிப்புகளை தாங்களாகவே அகற்றிக்கொள்ளுமாறு சம்பந்தப்பட்டவர்களுக்கு நோட்டீசு வழங்கப்பட்டது.
நேற்று காலை வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ஆறுமுகம், தாசில்தார் வாசுதேவன் ஆகியோர் தலைமையில் கொம்யூன் பஞ்சாயத்து, பொதுப்பணித்துறை ஊழியர்கள் 3 பொக்லைன் எந்திரங்களுடன் சேதராப்பட்டு மெயின்ரோட்டுக்கு வந்தனர். அங்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் கண்ணன் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டு இருந்தனர்.
சாலையோர ஆக்கிரமிப்பு கடைகள், வீடுகளை அதிகாரிகள் அகற்ற தயாரானார்கள். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வியாபாரிகள், பொதுமக்கள் அங்கு திரண்டு வந்தனர். தகவல் அறிந்த தீப்பாய்ந்தான் எம்.எல்.ஏ., காங்கிரஸ் வட்டார தலைவர் அருணகிரி மற்றும் காங்கிரஸ் கட்சியினரும் அங்கு வந்தனர்.
ஆக்கிரமிப்பு அகற்றுவது குறித்து முதல்-அமைச்சர் மற்றும் கலெக்டரிடம் முறையிட்டுள்ள நிலையில் ஆக்கிரமிப்புகளை அகற்றக்கூடாது என தீப்பாய்ந்தான் எம்.எல்.ஏ. அதிகாரிகளிடம் கூறினார். அப்போது பொதுமக்களும், வியாபாரிகளும் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் பொக்லைன் எந்திரங்களை அங்கிருந்து எடுத்துச் செல்லுமாறு அவர்கள் ஆவேசமாக கூறினர். அவர்களை போலீசார் சமாதானம் செய்ய முயன்றனர். அதனையும் மீறி பொதுமக்கள் அதிகாரிகளை சூழ்ந்து கடும் வாக்குவாதம் செய்தனர். இதையடுத்து அவர்களை அகற்ற முயன்றதால் போலீசாருக்கும், பொதுமக்களுக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கு பரபரப்பாக காணப்பட்டது.
இதுகுறித்து வில்லியனூர் சப்-கலெக்டர் ஜஸ்வந்த் சவுரவுக்கு அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர். அவர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, ஆக்கிரமிப்புகளை பார்வையிட்டார். பின்னர் ஆக்கிரமிப்புகளை அகற்றுவது குறித்து சேதராப்பட்டு பிப்டிக் அலுவலகத்தில் தீப்பாய்ந்தான் எம்.எல்.ஏ. மற்றும் கடை வியாபாரிகள், குடியிருப்புவாசிகளிடம் சப்-கலெக்டர் பேச்சுவார்த்தை நடத்தினார்.
பேச்சுவார்த்தையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற சப்-கலெக்டர் 15 நாட்கள் அவகாசம் அளித்தார். ஆனால் போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள விளம்பர பலகைகளை வியாபாரிகள் உடனே தாங்களாகவே அகற்றிக்கொள்ளவேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார். இதையடுத்து ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story