முதல்-அமைச்சர் நாராயணசாமி டெல்லி சென்றார் மத்திய மந்திரிகளை சந்தித்து பேசுகிறார்
புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று டெல்லி சென்றார். அவர் மத்திய மந்திரிகளை சந்தித்து பேச திட்டமிட்டுள்ளார்.
புதுச்சேரி,
புதுச்சேரி அரசின் அன்றாட நடவடிக்கைகளில் கவர்னர் கிரண்பெடி தலையிடுவது தொடர்பாகவும், கவர்னருக்கு சிறப்பு அதிகாரம் வழங்கியதை எதிர்த்தும் முதல்-அமைச்சரின் நாடாளுமன்ற செயலாளரான லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ. தொடர்ந்த வழக்கில் கவர்னருக்கு என்று தனிப்பட்ட அதிகாரம் எதுவும் கிடையாது என்று சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
இதை எதிர்த்து மத்திய அரசு சுப்ரீம் கோர்ட்டில் முறையீடு செய்தது. இந்த வழக்கில் முதல்-அமைச்சர் நாராயணசாமியும் பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட்டு கேட்டுக்கொண்டது.
இந்த வழக்கு இன்று (வெள்ளிக்கிழமை) மீண்டும் விசாரணைக்கு வருகிறது. இத்தகைய நிலையில் முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று டெல்லி புறப்பட்டு சென்றார். வழக்கு தொடர்பாக அவர் டெல்லியில் மூத்த வக்கீல்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லி சென்றிருந்த அவர் பிரதமர் நரேந்திரமோடி, நிதி மந்திரி நிர்மலா சீத்தாராமன் ஆகியோரையும் சந்தித்து பேசினார். தற்போதும் அவர் மத்திய மந்திரிகள் சிலரை சந்தித்து பேச திட்டமிட்டுள்ளார்.
புதுவை மாநில பட்ஜெட் கூட்டம் ஜூலை மாதம் நடைபெற உள்ள நிலையில் அவர் புதுவை மாநில வளர்ச்சி திட்டங்களுக்கு மத்திய அரசிடம் இருந்து கூடுதல் நிதி பெற கூட்டத்தில் வலியுறுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Related Tags :
Next Story