சங்கரன்கோவிலில் பயங்கரம்: வீட்டில் தனியாக இருந்த பெண் சரமாரி குத்திக்கொலை மர்மநபருக்கு போலீஸ் வலைவீச்சு


சங்கரன்கோவிலில் பயங்கரம்: வீட்டில் தனியாக இருந்த பெண் சரமாரி குத்திக்கொலை மர்மநபருக்கு போலீஸ் வலைவீச்சு
x
தினத்தந்தி 21 Jun 2019 4:00 AM IST (Updated: 21 Jun 2019 1:17 AM IST)
t-max-icont-min-icon

சங்கரன்கோவிலில் வீட்டில் தனியாக இருந்த பெண் கத்தியால் சரமாரியாக குத்திக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

சங்கரன்கோவில், 

சங்கரன்கோவிலில் வீட்டில் தனியாக இருந்த பெண் கத்தியால் சரமாரியாக குத்திக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கட்டிட தொழிலாளி

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் காமராஜர் நகர் முதலாவது தெருவை சேர்ந்தவர் கோமதிநாயகம், கட்டிட தொழிலாளி. இவருடைய மனைவி முத்துமாரி (வயது 33). இவர்களுக்கு திருமணமாகி 13 ஆண்டுகள் ஆகிறது. இந்த தம்பதிக்கு பூபதி (12), சஞ்சய்குமார் (10), மகேஸ்வரி (8) ஆகிய 3 குழந்தைகள் உள்ளனர்.

நேற்று காலையில் குழந்தைகளை பள்ளிக்கூடத்துக்கு அனுப்பி விட்டு, கோமதிநாயகம் கட்டிட வேலைக்கு சென்று விட்டார். முத்துமாரி வீட்டில் தனியாக இருந்தார். பின்னர் மதியம் கோமதிநாயகம் வீட்டுக்கு வந்து சாப்பிட்டுவிட்டு, மீண்டும் கட்டிட வேலைக்கு சென்று விட்டார்.

ரத்த வெள்ளத்தில் பிணம்

இந்த நிலையில் மாலை 4 மணியளவில் மூத்தமகன் பூபதி பள்ளிக்கூடத்தில் இருந்து வீட்டுக்கு வந்தான். வீட்டுக்குள் சென்ற அவன், ‘அம்மா...அம்மா‘ என்று அழைத்தவாறு சென்றுள்ளான். அப்போது வீட்டுக்குள் முத்துமாரி கத்திக்குத்து காயங்களுடன் ரத்தவெள்ளத்தில் பிணமாக கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த பூபதி கதறி அழுதுள்ளான். அவனது அழுகையை கேட்டு, அக்கம்பக்கத்தினர் கோமதிநாயகம் வீட்டுக்கு திரண்டு சென்றனர்.

போலீசார் விசாரணை

அப்போது அங்கே வீட்டுக்குள் முத்துமாரி கொலை செய்யப்பட்டு கிடந்ததை பார்த்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீஸ் சூப்பிரண்டு அருண்சக்திகுமார், சங்கரன்கோவில் போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜேந்திரன் மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். தடயவியல் மற்றும் கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர்.

முத்துமாரியின் கழுத்து, வயிறு பகுதிகளில் சரமாரியாக கத்தியால் குத்தப்பட்டு ரத்தம் ஆறாக ஓடியிருந்தது. மோப்பநாய் வரவழைக்கப்பட்டது. அந்த நாய் மோப்பம் பிடித்தவாறு வீட்டில் இருந்து கழுகுமலை ரோடு, காந்திநகர் பகுதியில் சுற்றி மீண்டும் வீட்டுக்குள் வந்து படுத்துக் கொண்டது.

மர்மநபருக்கு வலைவீச்சு

பின்னர் முத்துமாரியின் உடலை சங்கரன்கோவில் டவுன் போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். வீட்டில் கிடந்த செல்போனை போலீசார் கைப்பற்றி, அவருடன் கடைசியாக பேசிய நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அவரது உடலை பார்த்து கணவர் மற்றும் குழந்தைகள் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது. முத்துமாரி அணிந்திருந்த நகைகள் மற்றும் வீட்டில் இருந்த நகைகள், பணம் ஏதும் கொள்ளையடிக்கப்பட்டு உள்ளதா?, கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அவரை கொன்ற மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு சங்கரன்கோவிலில் வியாபாரியின் கையை அரிவாளால் வெட்டி பணத்தை கொள்ளையடித்த சம்பவம் மறைவதற்குள், வீடு புகுந்து பெண் குத்திக்கொலை செய்யப்பட்டு உள்ள சம்பவம் சங்கரன்கோவில் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Next Story