தென்மேற்கு பருவமழையை முன்னிட்டு அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம்


தென்மேற்கு பருவமழையை முன்னிட்டு அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம்
x
தினத்தந்தி 21 Jun 2019 4:15 AM IST (Updated: 21 Jun 2019 1:23 AM IST)
t-max-icont-min-icon

தென்மேற்கு பருவமழையை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடந்தது.

பெரம்பலூர்,

தென்மேற்கு பருவமழையை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக அனைத்துத்துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடந்தது. இதற்கு கலெக்டர் சாந்தா தலைமை தாங்கி பேசுகையில், தென்மேற்கு பருவமழை தொடங்க உள்ளதை முன்னிட்டு கோட்ட மற்றும் வட்ட அளவில் கூட்டங்கள் நடத்தப்பட்டு, கடந்த காலங்களில் பருவமழையால் பாதிக்கப்பட்ட இடங்கள் குறித்தும், அப்பகுதிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் அறிந்துகொள்வதுடன், அவற்றை எதிர்கொள்வதற்கு தேவையான நடவடிக்கைகள் குறித்தும் திட்டமிடல் வேண்டும். தென்மேற்குப் பருவமழை காலத்தில் பேரிடர் ஏதேனும் ஏற்படும் பட்சத்தில், பாதிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளில் உள்ள மக்களை மீட்டு பாதுகாப்பாக தங்க வைத்திட ஏதுவாக மாவட்டத்தின் அனைத்து பகுதியிலும் உள்ள சமுதாயக்கூடங்கள், பள்ளிக்கட்டிடங்கள் மற்றும் திருமண மண்டபங்கள் என பொதுமக்கள் தங்குவதற்கு தேவையான வசதிகள் கொண்ட கட்டிடங்கள் தேர்வுசெய்யப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட வேண்டும். மேலும் பொதுமக்கள் அனைவரும் தென்மேற்கு பருவமழையினால் ஏற்படும் சேதங்கள் குறித்து 24 மணி நேரமும் புகார் அளிக்க மாவட்ட நிர்வாகத்தால் ஏற்படுத்தப்பட்டுள்ள 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை மக்களுக்கு தெரிவிக்கும் வகையில் தேவையான விழிப்புணர்வுகளை ஏற்படுத்த வேண்டும். மேலும் தென்மேற்கு பருவமழைக்காலத்தில் பேரிடர் ஏதேனும் ஏற்படும் பட்சத்தில் அவற்றை போர்க்கால அடிப்படையில் எதிர்கொள்ள அனைத்துத்துறை அலுவலர்களும் தயார் நிலையில் இருந்திட வேண்டும் என்றார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி அழகிரிசாமி, திட்ட இயக்குனர் (ஊரக வளர்ச்சி முகமை) சீனிவாசன், வருவாய் கோட்டாட்சியர் விஸ்வநாதன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ராஜராஜன் மற்றும் அனைத்து தாசில்தார்கள் உள்பட அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Next Story