ராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கு: கைதான 11 பேரின் காவல் நீட்டிப்பு நாமக்கல் கோர்ட்டு உத்தரவு


ராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கு: கைதான 11 பேரின் காவல் நீட்டிப்பு நாமக்கல் கோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 21 Jun 2019 4:15 AM IST (Updated: 21 Jun 2019 1:28 AM IST)
t-max-icont-min-icon

ராசிபுரம் குழந்தைகள் விற்பனை வழக்கில் கைதாகி சிறையில் அடைக்கப்பட்டு உள்ள 11 பேரின் நீதிமன்ற காவலை ஜூலை மாதம் 4-ந் தேதி வரை நீட்டிப்பு செய்து நாமக்கல் கோர்ட்டில் உத்தரவிடப்பட்டது.

நாமக்கல், 

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் சட்ட விரோதமாக குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டது தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த வழக்கில் விருப்ப ஓய்வுபெற்ற செவிலியர் உதவியாளர் (நர்சு) அமுதவள்ளி, அவரது கணவர் ரவிச்சந்திரன், தம்பி நந்தகுமார், ஈரோடு தனியார் ஆஸ்பத்திரி நர்சு பர்வீன், ஆம்புலன்ஸ் டிரைவர் முருகேசன், சேலம் சர்க்கார் கொல்லப்பட்டி ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் உதவியாளர் சாந்தி, பெங்களூரு அழகுகலை நிபுணர் ரேகா மற்றும் புரோக்கர்கள் லீலா, ஹசீனா, அருள்சாமி, செல்வி ஆகிய 11 பேர் கைது செய்யப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.

இவர்களின் நீதிமன்ற காவல் நேற்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து போலீசார் நேற்று இவர்கள் 11 பேரையும் நாமக்கல் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். நர்சு அமுதவள்ளி உள்பட 11 பேரின் நீதிமன்ற காவலை ஜூலை மாதம் 4-ந் தேதி வரை நீட்டிப்பு செய்து நீதிபதி லதா உத்தரவிட்டார். இதையடுத்து 11 பேரும் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இதற்கிடையே ஆம்புலன்ஸ் டிரைவர் முருகேசன் சார்பில் ஜாமீனில் விடுவிக்கக்கோரி நாமக்கல் மாவட்ட முதன்மை கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இந்த மனு நேற்று நீதிபதி இளவழகன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அவர் மனு மீதான விசாரணையை வருகிற 24-ந் தேதிக்கு ஒத்திவைத்தார்.

Next Story