மாவட்டத்தில் 1,000 பண்ணை குட்டைகள் அமைக்க இலக்கு கலெக்டர் உமா மகேஸ்வரி தகவல்


மாவட்டத்தில் 1,000 பண்ணை குட்டைகள் அமைக்க இலக்கு கலெக்டர் உமா மகேஸ்வரி தகவல்
x
தினத்தந்தி 20 Jun 2019 11:00 PM GMT (Updated: 20 Jun 2019 8:00 PM GMT)

புதுக்கோட்டை மாவட்டத்தில் 1,000 பண்ணை குட்டைகள் 100 சதவீதம் மானியத்தில் அமைக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளதாக கலெக்டர் உமா மகேஸ்வரி தெரிவித்து உள்ளார்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் வட்டாரத்தில் வேளாண் பொறியியல் துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பண்ணைக் குட்டை பணிகளை கலெக்டர் உமாமகேஸ்வரி ஆய்வு செய்தார். ஆய்வின்போது வேளாண் இணை இயக்குனர் சுப்பையா, வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர் செல்வம், தோட்டக்கலை துணை இயக்குனர் அருணாசலம், கலெக்டரின் நேர்முக உதவியாளர் கோமதிதங்கம், உதவி பொறியாளர் வேலுசாமி உள்பட அரசு அலுவலர்கள் பலர் உடன் இருந்தனர்.

பின்னர் கலெக்டர் உமா மகேஸ்வரி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

விவசாயிகளின் மேம்பாட்டிற்காக தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தமிழகத்தில் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவ காலங்களை கருத்தில் கொண்டு மழை நீரை சேமிக்கும் வகையில், மாவட்ட நிர்வாகத்தால் தனி கவனம் செலுத்தப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக பண்ணை குட்டைகள் சிறந்த மழைநீர் சேகரிப்பு அமைப்பாக விளங்குகிறது.

பண்ணை குட்டைகள், மழை பெய்கிறபோது நிலத்தில் வழிந்தோடுகின்ற மழைநீரை சேகரித்து வைத்து, பயிர்கள் பாசன நீர் இல்லாமல் வறட்சியால் வாடும் நிலை ஏற்படும் பொழுது பயிர்களுக்கு தக்க நேரத்தில் உயிர்பாசனம் மற்றும் துணை பாசனம் அளிக்க பயன்படுகிறது. இதனால் பயிர்கள் காக்கப்பட்டு உரிய மகசூல் பெற வழிவகை செய்கிறது.

புதுக்கோட்டை மாவட்டத்தில் வேளாண் பொறியியல் துறையின் சார்பில், 2018-19-ம் நிதியாண்டில் 184 பண்ணை குட்டைகள் அமைக்கப்பட்டு உள்ளது.

2019-20-ம் நிதியாண்டில் மாவட்டத்தில் 1,000 பண்ணை குட்டைகள் ரூ.10 கோடி மதிப்பீட்டில் 100 சதவீதம் மானியத்தில் அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இத்திட்டத்தின் கீழ் பயன் பெற விரும்பும் விவசாயிகள் உதவி செயற்பொறியாளர், வேளாண்மை பொறியியல் துறை, திருக்கோகர்ணம், புதுக்கோட்டை என்ற முகவரியிலோ அல்லது உதவி செயற்பொறியாளர், வேளாண்மை பொறியியல் துறை, ராஜேந்திரபுரம், பட்டுக்கோட்டை சாலை, அறந்தாங்கி என்ற முகவரியிலோ உடனடியாக விண்ணப்பிக்கலாம்.

விவசாயிகளின் பொருளாதார மேம்பாட்டிற்கும், மழைநீர் சேகரிப்புக்கும் மிக சிறந்த அமைப்பாக விளங்கக் கூடிய பண்ணை குட்டைகளை அமைக்கும் விவசாயிகளுக்கு மாவட்ட நிர்வாகம் முழு ஒத்துழைப்பு அளிக்க தயாராக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story