நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் மத்திய அரசு பெண் அதிகாரியிடம் நகை திருடியவர் கைது 34 பவுன் மீட்பு
நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் மத்திய அரசு பெண் அதிகாரியிடம் நகை திருடியவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 34 பவுன் மீட்கப்பட்டது.
நெல்லை,
நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் மத்திய அரசு பெண் அதிகாரியிடம் நகை திருடியவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 34 பவுன் மீட்கப்பட்டது.
மத்திய அரசு பெண் அதிகாரி
சென்னை திருமங்கலம் பகுதியை சேர்ந்த மனுவேல் ஜான்சன் மனைவி மலர்விழி (வயது 57). இவர் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள மத்திய கணக்காயர் அலுவலகத்தில் மூத்த கணக்கு அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். கடந்த 28-ந் தேதி இவர் பாளையங்கோட்டையில் நடந்த ஒரு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக புறப்பட்டார்.
அவர் சென்னை எழும்பூரில் இருந்து நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயிலில் குளிர்சாதன பெட்டியில் பயணம் செய்தார். அப்போது 41 பவுன் தங்க நகைகளை ஒரு பெட்டியில் வைத்து பூட்டி, அதனை ஒரு பையில் வைத்து ரெயில் பெட்டியில் தனது இருக்கைக்கு கீழே வைத்திருந்தார்.
நகைகள் திருட்டு
மறுநாள் காலை ரெயில் நெல்லை சந்திப்பு ரெயில் நிலையத்துக்கு வந்த உடன் மலர்விழி கீழே இறங்கினார். அப்போது தனது பையில் வைத்திருந்த நகைகளை காணவில்லை. நள்ளிரவு நேரத்தில் மர்ம நபர் நகையை திருடிச்சென்று விட்டது தெரியவந்தது.
இதுகுறித்து அவர் நெல்லை சந்திப்பு ரெயில்வே போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து ரெயில்வே போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திர பாபு உத்தரவுப்படி 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசாரின் விசாரணையில் மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த ஒருவர் அந்த ரெயிலில் பயணம் செய்தது தெரியவந்தது. இதையடுத்து தனிப்படை போலீசார் மேற்கு வங்க மாநிலத்துக்கு சென்று விசாரணை நடத்தினர்.
கைது
அப்போது அங்குள்ள டார்ஜிலிங் சிலிகுரியை சேர்ந்த கமால்தாஸ் (45) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர், மலர்விழியிடம் இருந்து நகையை திருடியது தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் இருந்து 34 பவுன் நகைகளை போலீசார் மீட்டனர். பின்னர் அவரை கைது செய்து நெல்லைக்கு அழைத்து வந்தனர். நேற்று அவரை நெல்லை கோர்ட்டில் ஆஜர்படுத்தி, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story