தமிழக முதல்-அமைச்சரின், பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தில் பயன்பெற இ-சேவை மையத்தில் விண்ணப்பிக்கலாம் - கலெக்டர் தகவல்
தமிழக முதல்-அமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தில் பயன்பெற இ-சேவை மையத்தில் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்து உள்ளார். நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-
ஊட்டி,
தமிழக முதல்-அமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்தின் கீழ் பயன்பெற கீழ்க்கண்ட சான்றுகளுடன் இ-சேவை மையத்தில் விண்ணப்பிக்கலாம். பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் 1-ன் கீழ் ரூ.50 ஆயிரம், திட்டம் 2-ன் கீழ் ரூ.25 ஆயிரம் பெற தேவையான சான்றுகள் மற்றும் தகுதிகள் வரையறுக்கப்பட்டு உள்ளன. அதன்படி குடும்ப ஆண்டு வருமானம் தாயின் பெயரில் பெறப்பட வேண்டும்.
ஆண்டுக்கு அதிகபட்ச வருமானம் ரூ.72 ஆயிரமாக இருக்க வேண்டும். இருப்பிடச்சான்று குறைந்தபட்சம் 10 ஆண்டுகளுக்கு பெற்றிருக்க வேண்டும். ஆண் வாரிசு இல்லை என சான்று பெறப்பட வேண்டும். தாய் மற்றும் தந்தையின் வயது சான்று(மதிப்பெண் சான்று அல்லது மாற்று சான்றிதழ் அல்லது அரசு மருத்துவரிடம் இருந்து வயது சான்று) சமர்ப்பிக்கப்பட வேண்டும். குழந்தைகளின் பிறப்பு சான்றுகள் சமர்ப்பிக்க வேண்டும். தாய் மற்றும் தந்தையின் சாதி சான்றுகள் சமர்ப்பிக்க வேண்டும்.
குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை சான்று சமர்ப்பிப்பதோடு, அறுவை சிகிச்சையின்போது தாயின் வயது 35-க்குள் இருக்க வேண்டும். குடும்ப புகைப்படம் சமர்ப்பிக்க வேண்டும். பெற்றோரின் திருமண பத்திரிகை சமர்ப்பிக்க வேண்டும். முதல் குழந்தை மட்டும் இருந்தால் அந்த குழந்தை பிறந்து 3 ஆண்டுகளுக்குள்ளும், 2 குழந்தை இருந்தால் 2-வது குழந்தை பிறந்து 3 ஆண்டுகளுக்குள்ளும் மேற்கண்ட அனைத்து சான்றுகளுடன் விண்ணப்பிக்க வேண்டும். தாய் இல்லை எனில் தாயின் இறப்பு சான்றுடன் மேற்கண்ட சான்றுகள் தந்தையின் பெயரில் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் இத்திட்டம் தொடர்பான கூடுதல் விவரங்களுக்கு நீலகிரி மாவட்ட சமூகநல அலுவலகம் மற்றும் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலூரில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகங்களை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story