ஊட்டி அருகே, நுண்ணீர் பாசன திட்ட செயல்பாடுகள் குறித்து மத்திய குழுவினர் ஆய்வு
ஊட்டி அருகே நுண்ணீர் பாசன திட்ட செயல்பாடுகள் குறித்து மத்திய குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டத்தில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் ஒருங்கிணைந்த தோட்டக்கலை வளர்ச்சி இயக்க திட்டம் மற்றும் நுண்ணீர் பாசன திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த 2017-ம் ஆண்டு முதல் நுண்ணீர் பாசன திட்டத்தின் கீழ் 5 ஆயிரம் ஹெக்டர் நிலத்துக்கு 8 ஆயிரம் விவசாயிகளுக்கு மானியத்தில் டீசல் மோட்டார் பம்பு செட்டுகள், குழாய்கள், தெளிப்பு நீர் பாசன கருவிகள் போன்ற உபகரணங்கள் வழங்கப்பட்டு உள்ளன.
இத்திட்டம் நாடு முழுவதும் உள்ள மலைப்பிரதேசங்களில் முழுவீச்சில் செயல்படுத்தப்படுகிறது. விவசாயிகள் குறைந்த தண்ணீரை பயன்படுத்தி அதிக மகசூலை பெறுவதற்காக திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இத்திட்டத்தில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின வகுப்பை சேர்ந்த விவசாயிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. நீலகிரி மாவட்டத்தில் நடப்பாண்டில் விவசாயிகள் பயன்பெறும் வகையில் ரூ.4 கோடியே 30½ லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இந்த திட்டம் நீலகிரியில் பாலாடா, கோத்தகிரி, மசக்கல், மேடகல், பாபியூர் உள்பட பல்வேறு கிராமங்களில் விவசாயிகளுக்காக செயல்படுத்தப்படுகிறது. இதன் மூலம் சிறு, குறு விவசாயிகள் பயன் அடைந்து வருகின்றனர்.
இந்த நிலையில் டெல்லியில் உள்ள பிரதமர் அலுவலகத்தின் திட்ட துணை ஆலோசகர் குமாரவேல், மத்திய வேளாண்மை துறையின் உதவி ஆணையர் யோகேஷ் ஆகியோர் தலைமையில் மத்திய குழுவினர் ஊட்டி அருகே உள்ள பாலாடா, கல்லக்கொரை கிராமங்களில் உள்ள விவசாய நிலங்களில் திட்ட செயல்பாடுகள் குறித்து நேரடி ஆய்வு மேற்கொண்டனர். மலைப்பிரதேசத்தில் விவசாய பயிர்களுக்கு தேவையான தண்ணீர் உள்ளதா?, மானியத்தில் வழங்கப்பட்ட பம்பு செட்டுகள் பயன்படுத்தப்படுகிறதா? என்று ஆய்வு செய்தனர். விவசாயிகள் தெளிப்பு நீர் பாசன கருவிகளை பயன்படுத்துகிறார்களா? என்று பார்வையிட்டனர். பின்னர் நீலகிரி மாவட்டத்தில் தான் நுண்ணீர் பாசன திட்டம் நல்ல முறையில் செயல்படுத்தப்படுகிறது என்று மத்திய குழுவினர் தெரிவித்தனர். அவர்கள் நீலகிரியில் பல்வேறு இடங்களில் 3 நாட்கள் ஆய்வு மேற்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story