கர்நாடகத்தில் மழை பெய்தால் தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறப்போம் முதல்-மந்திரி குமாரசாமி பேட்டி


கர்நாடகத்தில் மழை பெய்தால் தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறப்போம் முதல்-மந்திரி குமாரசாமி பேட்டி
x
தினத்தந்தி 21 Jun 2019 5:00 AM IST (Updated: 21 Jun 2019 2:07 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் மழை பெய்தால் தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறப்போம் என்று முதல்-மந்திரி குமாரசாமி கூறியுள்ளார்.

பெங்களூரு, 

கர்நாடகத்தில் மழை பெய்தால் தமிழகத்திற்கு காவிரியில் தண்ணீர் திறப்போம் என்று முதல்-மந்திரி குமாரசாமி கூறியுள்ளார்.

பெங்களூருவில் கர்நாடக கூட்டணி அரசின் ஓராண்டு சாதனை புத்தகம் வெளியீட்டு விழா நடந்தது. இதில் முதல்-மந்திரி குமாரசாமி கலந்துகொண்டு அரசின் சாதனை புத்தகத்தை வெளியிட்டார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

எடியூரப்பா கேட்கிறார்

கர்நாடக முதல்-மந்திரியாக கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 23-ந் தேதி பதவி ஏற்றேன். இந்த கூட்டணி அரசு அமைந்த நாளில் இருந்து இதை கவிழ்க்க பா.ஜனதா முயற்சி செய்தது. இப்போதும், ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

எங்கள் கட்சி எம்.எல்.ஏ.வுக்கு ரூ.10 கோடி கொடுப்பதாக பா.ஜனதா பேரம் பேசியதை நான் கடந்த சில நாட்களுக்கு முன்பு சொன்னேன். அதற்கு ஆதாரங்கள் எங்கே என்று எடியூரப்பா கேட்கிறார். நான் ஆதாரம் இல்லாமல் பேச மாட்டேன்.

விவசாய கடன் தள்ளுபடி

முன்பு எங்கள் கட்சி எம்.எல்.ஏ.வுடன் எடியூரப்பாவே பேரம் பேசியது தொடர்பான தொலைபேசி உரையாடலை வெளியிட்டேன். இது அவருக்கு நினைவிருக் கட்டும். இந்த கூட்டணி அரசு மீதமுள்ள 4 ஆண்டுகளையும் வெற்றிகரமாக நிறைவு செய்யும். ரூ.45 ஆயிரம் கோடி விவசாய கடனை தள்ளுபடி செய்வதாக அறிவித்தோம். இதை படிப்படியாக அமல்படுத்தி வருகிறோம்.

இதுவரை சுமார் 11 லட்சம் விவசாயிகளின் கடன் ரூ.13 ஆயிரம் கோடி தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. கடந்த 2 பட்ஜெட்டில் இந்த கடன் தள்ளுபடி திட்டத்திற்காக ரூ.25 ஆயிரம் கோடியை ஒதுக்கி வைத்துள்ளேன். இந்த கடன் தள்ளுபடி திட்டத்தில் தவறுகள் நடைபெறுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தரை பாலங்கள்

சில இடங்களில் விவசாயிகள் பெயரில் கடன் பெற்றதாக கூறி போலியான ஆவணங்கள் கொடுத்ததை கண்டுபிடித்துள்ளோம். இவ்வாறு போலி ஆவணங்களை கண்டறிந்து அவற்றை ரத்து செய்வதால், கடன் தள்ளுபடி சுமை ஓரளவுக்கு குறையும்.

‘ஏழைகளின் உறவு‘ திட்டத்தில் தெரு வியாபாரிகளுக்கு கடன் வழங்கும் திட்டத்தை அமல்படுத்தினோம். பள்ளி செல்லும் குழந்தைகளுக்காக ரூ.320 கோடி செலவில் தரை பாலங்கள் கட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இப்போது கிராம தரிசன திட்டத்தை நாளை (அதாவது இன்று) முதல் தொடங்குகிறேன்.

மக்களின் குறைகள் தீர்க்கப்படும்

இதனால் கிராமங்களின் நிலை மாறும். அங்குள்ள மக்களின் குறைகள் தீர்க்கப்படும். இதன் மூலம் அரசாங்கம், மக்களிடம் கொண்டு செல்லப்படுகிறது. மக்களுடன் நேரடி தொடர்பு ஏற்படுத்தப்படுகிறது. மக்களின் கஷ்டங்களை அறிந்து அதை தீர்க்க இந்த கிராம தரிசனம் உதவுகிறது.

அனைத்து மந்திரிகள் மற்றும் எம்.எல்.ஏ.க்களும் கிராம தரிசன நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என்றும், கிராமங்களில் தங்கி மக்களின் குறைகளை கேட்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி இருக்கிறேன். இந்த கிராம தரிசன திட்டத்தை எடியூரப்பா அரசியலுக்காக குறை சொல்கிறார்.

கர்நாடகத்தில் மழை

தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க வேண்டும் என்று காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் கர்நாடகத்தில் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. கர்நாடகத்தில் மழை பெய்யும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம். கர்நாடகத்தில் மழை பெய்தால் எனவே காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவு குறித்து பரிசீலிப்போம். புதிதாக பொறுப்பேற்ற 2 மந்திரிகளுக்கு இன்று (நேற்று) மாலைக்குள் இலாகாக்கள் ஒதுக்கப்படும்.

இவ்வாறு முதல்-மந்திரி குமாரசாமி கூறினார்.

Next Story