திருவட்டார் அருகே வீட்டின் கதவை உடைத்து நகை-பணம் திருட்டு மர்ம நபரை பொதுமக்கள் மடக்கிப்பிடித்தனர்


திருவட்டார் அருகே வீட்டின் கதவை உடைத்து நகை-பணம் திருட்டு மர்ம நபரை பொதுமக்கள் மடக்கிப்பிடித்தனர்
x
தினத்தந்தி 21 Jun 2019 4:30 AM IST (Updated: 21 Jun 2019 2:22 AM IST)
t-max-icont-min-icon

திருவட்டார் அருகே வீட்டின் கதவை உடைத்து நகை-பணம் திருடிச் சென்ற மர்ம நபரை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.

திருவட்டார்,

திருவட்டார் அருகே செறுகோல் வடசேரிவிளை பகுதியைச் சேர்ந்தவர் ராஜையன், தொழிலாளி. இவருடைய மனைவி வசந்தா. இவர்களுடைய மகன் அஜின். வசந்தா அப்பகுதியில் உள்ள முந்திரி ஆலையிலும், அஜின் கூலி வேலைக்கும் சென்று வருகின்றனர்.

இந்தநிலையில் நேற்று காலை வழக்கம்போல் ராஜையன் உள்பட 3 பேரும் வேலைக்கு சென்று விட்டனர். பகல் 12 மணியளவில் அஜின் வீட்டிற்கு நடந்து வந்த கொண்டிருந்தபோது, அவருடைய வீட்டில் இருந்து ஒரு மர்ம நபர் செல்வதை கண்டார். அதைத்தொடர்ந்து, வேகமாக வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, பின்பக்க கதவு உடைக்கப்பட்டு பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தன. மேலும், அலமாரியில் இருந்த 2 பவுன் நகை, ரூ.2 ஆயிரம் ரொக்கம் ஆகியவை மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உடனே அஜின், வீட்டில் இருந்து சென்ற மர்ம நபரை திருடன்... திருடன்... என்று அக்கம் பக்கத்தினர் உதவியுடன் விரட்டிச் சென்றார்.

அதற்குள் அந்த நபர் பயணம்-இரவிபுதூர்கடை சாலையில் வந்த ஒரு மோட்டார் சைக்கிளை நிறுத்தி உதவி கேட்டு ஏறிச்சென்றார். அந்த சாலையில் சீரமைப்பு பணி நடைபெற்று வந்ததால் மெதுவாக சென்ற மோட்டார் சைக்கிளை பொதுமக்கள் விரட்டிச் சென்று மர்ம நபரை பிடித்து தர்மஅடி கொடுத்தனர். இதைகண்டு மோட்டார் சைக்கிளில் ஏற்றியவர் செய்வதறியாது திகைத்தார்.

தகவல் அறிந்த திருவட்டார் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். போலீசாரை கண்டதும் பொதுமக்களிடம் சிக்கிய திருடன் மயங்கியதால், அவனை சிகிச்சைக்காக தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். போலீசார் அவனிடம் நடத்திய விசாரணையில் தக்கலை பஸ்நிலையம் பகுதியை சேர்ந்த பிரசாத் (வயது42) என்பது தெரியவந்தது. அந்த முகவரியில் போலீசார் விசாரணை நடத்தியபோது, அது போலியான முகவரி என்பது தெரியவந்தது. அதைதொடர்ந்து போலீசார் அவனிடம் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Next Story