கோலார் தங்கவயல் புதிய போலீஸ் சூப்பிரண்டாக தமிழக பெண் ஐ.பி.எஸ். அதிகாரி பொறுப்பேற்பு
கோலார் தங்கவயல் புதிய போலீஸ் சூப்பிரண்டாக தமிழக பெண் ஐ.பி.எஸ். அதிகாரி பொறுப்பேற்று உள்ளார். அவர் கோலார் தங்கவயலில் போக்குவரத்து நெரிசலை சீர்படுத்த நடவடிக்கை எடுப்பேன் என்று கூறினார்.
கோலார் தங்கவயல்,
கோலார் தங்கவயல் புதிய போலீஸ் சூப்பிரண்டாக தமிழக பெண் ஐ.பி.எஸ். அதிகாரி பொறுப்பேற்று உள்ளார். அவர் கோலார் தங்கவயலில் போக்குவரத்து நெரிசலை சீர்படுத்த நடவடிக்கை எடுப்பேன் என்று கூறினார்.
தமிழக பெண் ஐ.பி.எஸ். அதிகாரி
கோலார் தங்கவயல் புதிய போலீஸ் சூப்பிரண்டாக முகமது சுஜீதா நியமிக்கப்பட்டார். இவர் தமிழகத்தைச் சேர்ந்த ஐ.பி.எஸ். அதிகாரி ஆவார். நேற்று முன்தினம் அவர் பதவி ஏற்றுக் கொண்டார். இந்த நிலையில் நேற்று அவர் தனது அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
எனது சொந்த ஊர் தமிழ்நாடு தூத்துக்குடி ஆகும். எனது பள்ளிப்படிப்பை தூத்துக்குடியிலும், கல்லூரி படிப்பை சென்னையிலும் முடித்தேன். நான் 2014-ம் ஆண்டு ஐ.பி.எஸ். அதிகாரி ஆனேன். ஐ.பி.எஸ். அதிகாரியாக பதவி ஏற்று முதன்முதலில் கர்நாடக மாநிலம் சிவமொக்காவில் உதவி போலீஸ் சூப்பிரண்டாக பணியில் சேர்ந்தேன். அதன்பிறகு மைசூரு மாவட்டம் நஞ்சன்கூடு உதவி போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றினேன். இந்த ஆண்டு ஜனவரி மாதம் கர்நாடக ரிசர்வ் போலீஸ் படை 4-வது பட்டாலியன் போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டேன்.
தற்போது முதல் முறையாக கோலார் தங்கவயல் போலீஸ் சூப்பிரண்டாக நியமிக்கப்பட்டு இருக்கிறேன். கோலார் தங்கவயல் மிகச்சிறந்த நகரம் என்றும், குட்டி இங்கிலாந்து என்றும் அழைக்கப்பட்டு வருகிறது. இருப்பினும் கோலார் தங்கவயலில் போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது.
நடவடிக்கை எடுக்கப்படும்
அதை சீர்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள், ஆட்டோ டிரைவர்களை அழைத்து ஆலோசனை நடத்த இருக்கிறேன். கோலார் தங்கவயல் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் போலீசார் பணியாற்றுவார்கள். அதற்காக பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொள்ள இருக்கிறேன். கோலார் தங்கவயலில் உள்ள ஒவ்வொரு பகுதிக்கும் நேரில் சென்று மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிய இருக்கிறேன். அப்போது மக்கள் கூறும் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story