வீராணம் நீர்மட்டம் குறைவு, என்.எல்.சி. சுரங்க நீரை சென்னைக்கு அனுப்பும் பணி தீவிரம்
வீராணம் ஏரியின் நீர்மட்டம் 43 அடியாக குறைந்துள்ளது. அதனால் என்.எல்.சி. சுரங்க நீரை சென்னைக்கு அனுப்பும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தண்ணீர் பற்றாக்குறையை சமாளிக்க இந்த நடவடிக்கையை அதிகாரிகள் எடுத்துள்ளனர்.
கடலூர்,
கடலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரி வீராணம் ஆகும். இந்த ஏரி மூலம் கடலூர் மாவட்ட காவிரி டெல்டா பகுதியில் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இந்த ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடி ஆகும்.
சென்னையில் ஏற்பட்ட தண்ணீர் பற்றாக் குறையை சமாளிக்க கடந்த மாதம் கீழணையில் இருந்து வடவாறு வழியாக காவிரி தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டு வீராணம் ஏரி நிரப்பப்பட்டது. இதன் காரணமாக ஏரியில் இருந்து தினமும் வினாடிக்கு 74 கனஅடி தண்ணீர் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் ஏரிக்கு நீர் வரத்து இல்லாததாலும், வெயில் சுட்டெரிப்பதாலும் ஏரியின் நீர்மட்டம் படிப்படியாக சரிந்து வருகிறது. நேற்று மாலை ஏரியின் நீர்மட்டம் 43 அடியாக குறைந்தது. ஏரியின் நீர்மட்டம் குறைந்து வருவதால் சென்னைக்கு அனுப்பப்பட்டு வந்த தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டது. அதாவது வினாடிக்கு 41 கன அடி நீர் மட்டுமே அனுப்பப்பட்டு வருகிறது.
வீராணம் ஏரியின் நீர்மட்டம் 39 அடி வரை இருந்தால் மட்டுமே சென்னைக்கு தண்ணீர் அனுப்ப முடியும். தற்போது ஏரியில் இருக்கிற தண்ணீரை வைத்துக்கொண்டு 20 முதல் 25 நாட்கள் மட்டுமே சென்னைக்கு குடிநீர் அனுப்ப முடியும் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சென்னையில் தற்போது ஏற்பட்டுள்ள கடும் குடிநீர் பற்றாக்குறையை போக்க வீராணம் ஏரியில் இருந்து அனுப்பி வைக்கப்படும் தண்ணீர் போதுமானதாக இல்லை. இதன் காரணமாக என்.எல்.சி. சுரங்கத்திலிருந்து வரும் தண்ணீரை கூடுதலாக சென்னைக்கு அனுப்ப குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் முடிவு செய்தனர்.
என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தின் சுரங்கத்தில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் வடலூர் அருகே உள்ள வாலாஜா ஏரியில் நிரப்பப்படுகிறது. இதனால் 5.5 அடி கொள்ளளவு கொண்ட வாலாஜா ஏரியில் தற்போது 5 அடி தண்ணீர் உள்ளது. கடல்போல் காட்சி அளிக்கும் வாலாஜா ஏரியில் இருந்து, பரவனாற்றுக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அங்கு அமைக்கப்பட்டுள்ள பெரிய தொட்டிகளில் இருந்து மோட்டார்கள் மூலம், வடக்குத்தில் உள்ள சுத்திகரிப்பு நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
அங்கு தண்ணீரை சுத்திகரித்து வீராணம் குழாய் மூலம் சென்னைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. கடந்த மாதம் 2 அல்லது 3 நாளுக்கு ஒரு முறை மட்டுமே என்.எல்.சி. சுரங்க நீரை சுத்திகரித்து சென்னைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் தற்போது சென்னையில் தண்ணீர் பற்றாக்குறை அதிகரித்துள்ளதால் குடிநீர் அதிகளவு தேவைப்படுகிறது. எனவே என்.எல்.சி. சுரங்க நீரை சுத்திகரித்து கூடுதலாக குடிநீர் கொண்டு செல்லப்படுகிறது.
மேலும் சேத்தியாத்தோப்பு பகுதியில் பரவனாற்றிலும், பண்ருட்டி பகுதியில் கெடிலம் ஆற்றிலும் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறுகள் மூலம் தண்ணீர் உறிஞ்சப்பட்டு வீராணம் குழாய் வழியாக சென்னைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. 24 மணி நேரமும் தடையின்றி குடிநீர் அனுப்பும் பணியில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நீர், சென்னை பெருநகரின் ஒரு பகுதியை சேர்ந்தவர்களின் தாகத்தை தீர்க்க இயலும் என்று குடிநீர் வடிகால் வாரிய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story