பா.ஜனதாவுக்கு தான் மீண்டும் முதல்-மந்திரி பதவி சிவசேனா ஆண்டு விழாவில் பட்னாவிசின்சூசக பேச்சால் பரபரப்பு


பா.ஜனதாவுக்கு தான் மீண்டும் முதல்-மந்திரி பதவி சிவசேனா ஆண்டு விழாவில் பட்னாவிசின்சூசக பேச்சால் பரபரப்பு
x
தினத்தந்தி 21 Jun 2019 4:00 AM IST (Updated: 21 Jun 2019 3:32 AM IST)
t-max-icont-min-icon

பா.ஜனதாவுக்கு தான் மீண்டும் முதல்-மந்திரி பதவி என்று சிவசேனா கட்சி ஆண்டு விழாவில் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் சூசகமாக பேசி பரபரப்பை ஏற்படுத்தினார்.

மும்பை,

பா.ஜனதாவுக்கு தான் மீண்டும் முதல்-மந்திரி பதவி என்று சிவசேனா கட்சி ஆண்டு விழாவில் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் சூசகமாக பேசி பரபரப்பை ஏற்படுத்தினார்.

சிவசேனா ஆண்டு விழா

மராட்டியத்தில் பா.ஜனதா - சிவசேனா கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் இரு கட்சிகளும் கூட்டணி வைத்து போட்டியிட முடிவு செய்துள்ளன. இந்த நிலையில் பா.ஜனதா- சிவசேனா கூட்டணி வெற்றி பெற்றால் பா.ஜனதாவை சேர்ந்தவர் தான் மீண்டும் மாநிலத்தின் முதல்-மந்திரி ஆவார் என்று நிதிமந்திரி சுதீர் முங்கண்டிவார் கூறினார். இதற்கு சிவசேனா எதிர்ப்பு தெரிவித்தது.

இந்த நிலையில் சிவசேனா கட்சியின் 53-வது ஆண்டு விழா நேற்று முன்தினம் மும்பையில் நடந்தது. அன்றைய நாளில் சிவசேனா கட்சி பத்திரிகையான சாம்னாவில் வெளியான தலையங்கத்தில், அடுத்த சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு மாநிலத்தில் சிவசேனாவை சேர்ந்தவர் முதல்-மந்திரி ஆவதை உறுதி செய்வோம் என கூறப்பட்டு இருந்தது.

முதல்-மந்திரி பேச்சு

இந்த நிலையில் சிவசேனா ஆண்டு விழாவில் அக்கட்சியின் அழைப்பின் பேரில் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கலந்து கொண்டார். வேறு கட்சியை சேர்ந்த ஒரு முதல்-மந்திரி சிவசேனா ஆண்டு விழாவில் கலந்து கொள்வது இதுவே முதல் முறையாகும். விழாவில் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் பரபரப்பாக பேசியதாவது:-

உத்தவ் தாக்கரே எனது மூத்த சகோதரர் போன்றவர். நாங்கள் ஆட்சிக்கு அதிகாரத்தின் பின்னால் செல்லவில்லை. நல்ல ஆட்சியை கொடுக்க வேண்டும் என்பதில் மட்டுமே நம்பிக்கை வைத்து உள்ளோம். சிங்கமும் (பா.ஜனதா), புலியும் (சிவசேனா) மீண்டும் ஒன்று சேர்ந்து உள்ளது. இதில் யார் காட்டை(மாநிலத்தை) ஆட்சி செய்ய போகிறார்கள் என்பதை சொல்ல வேண்டிய தேவையில்லை.

(சிங்கம் தான் காட்டுக்கு ராஜா என்பது அறிந்த விஷயம். இதனால் பா.ஜனதாவுக்கு தான் மீண்டும் முதல்-மந்திரி பதவி என்பதை உணர்த்தும் வகையில் சிங்கம், புலியை ஒப்பிட்டு பட்னாவிஸ் இவ்வாறு சூசகமாக பேசினார்)

வெற்றி பெறுவதே இலக்கு

அடுத்த முதல்-மந்திரி யார்?, துணை முதல்-மந்திரி யார்? என்று நீங்கள் கவலைப்படவேண்டாம். அந்த வேலையை என்னிடமும், உத்தவ் தாக்கரேவிடமும் விட்டுவிடுங்கள். சட்டமன்ற தேர்தலில் கவனம் செலுத்துங்கள். அடுத்த முதல்-மந்திரி யார்? என்பதை நாங்கள் சரியான நேரத்தில் தெரிவிப்போம். வருகிற சட்டமன்ற தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டும் என்பதே நமது இலக்கு.

இவ்வாறு அவர் பேசினார்.

இதையடுத்து உத்தவ் தாக்கரே பேசுகையில், “பா.ஜனதாவுடன் எங்களுக்கு பல விஷயங்களில் கருத்து வேறுபாடுகள் இருந்தன. அமித்ஷா, முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் ஆகியோர் சந்தித்து பேசியபின் அவை தீர்க்கப்பட்டுவிட்டன. நாங்கள் எல்லாவற்றையும் சரிசமமாக பகிர்ந்து கொள்வோம். பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அதற்கான தொகை கிடைப்பதில்லை. இந்த பிரச்சினையில் உள்ள தவறுகள் கண்டறியப்பட்டு சட்டத்திருத்தம் மேற்கொள்ள வேண்டும்” என்றார்.

Next Story