தலைமறைவாக இருந்து வரும் மதபோதகர் ஜாகீர் நாயக் ஜூலை 31-ந் தேதிக்குள் நேரில் ஆஜராக வேண்டும் மும்பை சிறப்பு கோர்ட்டு உத்தரவு
வெளிநாட்டில் தலைமறைவாக இருந்து வரும் மதபோதகர் ஜாகீர் நாயக் ஜூலை 31-ந் தேதிக்குள் நேரில் ஆஜராக வேண்டும்.
மும்பை,
வெளிநாட்டில் தலைமறைவாக இருந்து வரும் மதபோதகர் ஜாகீர் நாயக் ஜூலை 31-ந் தேதிக்குள் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் இல்லையெனில் ஜாமீனில் வெளிவரமுடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும் எனவும் மும்பை சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
ரூ.193 கோடி மோசடி
மும்பையை சேர்ந்த சர்ச்சைக்குரிய இஸ்லாமிய மதபோதகர் ஜாகீர் நாயக். இவர் மீது கடந்த 2016-ம் ஆண்டு அமலாக்கத்துறையினர் ரூ.193 கோடி பண மோசடி வழக்கு பதிவு செய்தனர். மேலும் அவர் மீது சட்டவிரோத தடுப்பு சட்டத்தின் கீழ் தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ) அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்தனர்.
இதற்கிடையே ஜாகீர் நாயக் வெளிநாட்டுக்கு தப்பி விட்டார். தற்போது அவர் மலேசியாவில் தலைமறைவாக இருப்பதாக கூறப்படுகிறது.
எச்சரிப்பு
இந்த நிலையில் ஜாகீர் நாயக் மீதான வழக்கு மும்பையில் உள்ள பணமோசடி தடுப்பு சட்ட சிறப்பு கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த கோர்ட்டில், வழக்கில் சம்பந்தப்பட்ட அபுல் சதாக் என்பவர் மீது கூடுதல் குற்றப்பத்திரிகையை அமலாக்கத்துறையினர் நேற்று முன்தினம் தாக்கல் செய்தனர். அப்போது, ஜாகீர் நாயக் இதுநாள் வரை கோர்ட்டில் ஆஜராகாமல் இருப்பது பற்றி நீதிபதி பிரசாந்த் ராஜ்வைத்யா கேள்வி எழுப்பினார்.
இதையடுத்து அடுத்த மாதம் (ஜூலை) 31-ந் தேதிக்குள் ஜாகீர் நாயக் கோர்ட்டில் நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். அதன்படி ஆஜராகாவிட்டால், அவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும் என்று எச்சரித்து வழக்கு விசாரணையை நீதிபதி தள்ளி வைத்தார்.
Related Tags :
Next Story