மானாமதுரையில் கொத்தமல்லி கிலோ ரூ.200 - வரத்து குறைவால் விலை அதிகரிப்பு
மானாமதுரையில் கொத்தமல்லி கிலோ ரூ.200-க்கு விற்கப்படுகிறது. வரத்து குறைவால் விலை அதிகரித்துள்ளதை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து உள்ளனர்.
மானாமதுரை,
கடும் வறட்சி காரணமாக மார்க்கெட்டிற்கு வரத்து குறைந்ததால் கொத்தமல்லியின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. தமிழகம் முழுவதும் கடந்த சில வருடங்களாக போதிய மழை இல்லாததால் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. விளைச்சல் இல்லாததால் காய்கறிகளின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது. இந்நிலையில் கொத்தமல்லியின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. பொதுவாக வாரச்சந்தை, காய்கறி சந்தைகளில் ரூ.10-க்கு கை நிறைய ஒரு கட்டு கொத்தமல்லி வழங்கப்படுவது வழக்கம்.
தற்போது கடும் வறட்சி காரணமாக கொத்தமல்லியின் வரத்து இல்லாததால் விலை பல மடங்கு உயர்ந்து விற்பனையாகிறது. இந்தநிலையில் மானாமதுரையில் வாரந்தோறும் வியாழக்கிழமை காய்கறி சந்தை நடைபெறுவது வழக்கம். இதில் மானாமதுரையை சுற்றியுள்ள 39 ஊராட்சிகளைச் சேர்ந்த கிராமமக்கள் காய்கறிகளை வாங்கி சென்று இருப்பு வைத்து கொள்வது வழக்கம்.
நேற்று சந்தைக்கு காய்கறி வாங்க வந்த பொதுமக்கள் கொத்தமல்லியின் விலையை கேட்டு அதிர்ச்சியடைந்தனர். காரணம் ஒரு கிலோ கொத்தமல்லி ரூ.200 என விற்பனை செய்யப்பட்டது. இப்போது ரூ.10 கொடுத்தால் ஒரே ஒரு செடி மட்டும் வழங்குகின்றனர். இதை பலரும் வேறு வழியின்றி வாங்கி சென்றனர். இதனால் இனி வரும் காலங்களில் கொத்தமல்லி சட்னி வீடுகளில் இருக்காது. இதுகுறித்து வியாபாரி ஒருவர் கூறுகையில், மானாமதுரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வாரச்சந்தைகளில் கறிவேப்பிலை, கொத்தமல்லி விற்பனை செய்வது வழக்கம்.
கடந்த வாரம் வரை கிலோ ரூ.10-க்கு கொத்தமல்லி விற்கப்பட்டது. இப்போது ரூ.200 என்று விலை அதிகரித்துள்ளது. மதுரையில் ஒரு கிலோ கொத்தமல்லி ரூ.180. வேன் வாடகை, கூலி எல்லாம் சேர்த்து கிலோ ரூ.200 என விற்பனை செய்கிறோம் என்றார். தேனி, தேவாரம், சின்னமனூர் பகுதியில் அதிகமாக கொத்தமல்லி விளைவிக்கப்படுகிறது. தற்போது மழை இல்லாததால் பெரும்பாலான இடங்களில் கொத்தமல்லி பயிரிடப்படவில்லை. புனே நகரில் இருந்து ரெயில்களில் கொண்டு வந்து கொத்தமல்லி விற்பனை செய்வதால் விலை அதிகரித்துள்ளது என்றார்.
Related Tags :
Next Story