காய்கறி மகத்துவ மையம் மூலம், 1½ கோடி தக்காளி, கத்தரி, மிளகாய் நாற்றுகள் உற்பத்தி - சர்வதேச கருத்தரங்கில் தகவல்
காய்கறி மகத்துவ மையம் மூலம் 1½ கோடி தக்காளி, கத்தரி, மிளகாய் நாற்றுகள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.
திண்டுக்கல்,
இந்தியா-இஸ்ரேல் கூட்டு முயற்சியில் இந்தியாவில் மொத்தம் 26 மகத்துவ மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில் காய்கறி பயிர் களுக்காக 7 மையங்கள் தொடங்கப்பட்டன. அதில் ஒன்று திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரத்தில் அமைக்கப்பட்டுள்ளது. நேற்று இந்த மையத்தில் ‘மகத்துவ மையம் மற்றும் எதிர்காலம் நோக்கி’ என்ற தலைப்பில் சர்வதேச கருத்தரங்கம் நடந்தது. இதற்கு தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குனர் சுப்பையன் தலைமை தாங்கினார். தமிழக வேளாண்மை துறை முதன்மை செயலாளர் ககன்தீப்சிங் பேடி, மத்திய வேளாண் துறை முதன்மை செயலாளர் சஞ்சய் அகர்வால், இஸ்ரேல்-இந்திய நாட்டின் தூதுவர் ரோன்மல்கா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கருத்தரங்கில், வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலன்துறை இணை செயலாளர் தினேஷ்குமார், இஸ்ரேல் வேளாண் அமைச்சகம் சார்பில் செயல்படும் மாசவ் மையத்தின் தலைவர் ஹில்ஹேஸ்கெல் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். அப்போது அவர்கள் கூறியதாவது:-
காய்கறி மகத்துவ மையமானது நவீன தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்கு விரைவாக கொண்டு செல்லும் ஒரு தளமாக உள்ளது. கடந்த ஆண்டு 1½ கோடி எண்ணிக்கையில் தக்காளி, கத்தரி, மிளகாய் நாற்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு தோட்டக்கலை இயக்கம் மூலம் முழு மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டன.
இவ்வாறு அவர்கள் கூறினர். கருத்தரங்கில், இஸ்ரேல் தூதரக தலைமை அதிகாரி டான்குர்ஸ், திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் டி.ஜி.வினய் மற்றும் விவசாயிகள் பலர் கலந்துகொண்டனர். பின்னர் ரெட்டியார்சத்திரம் காய்கறி மகத்துவ மையத்தில் வைக்கப்பட்டுள்ள நவீன விவசாய கருவிகளை இஸ்ரேல் நாட்டு அதிகாரிகள் பார்வையிட்டனர்.
தமிழ்நாடு வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை சார்பில், பழனி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ரூ.13¼ கோடியில் காய்கறி, பழங்கள் பதப்படுத்தும் நிலையம், திரவ உயிர்உர உற்பத்தி நிலையம் மற்றும் குளிர்பதன கிட்டங்கி ஆகியவை அமைக்கப்பட்டு வருகிறது. இங்கு நேற்று மத்திய வேளாண் துறை முதன்மை செயலாளர் சஞ்சய் அகர்வால், இணை செயலாளர் தினேஷ்குமார், தமிழக வேளாண்மை துறை முதன்மை செயலாளர் ககன்தீப்சிங் பேடி, தோட்டக்கலைத்துறை இயக்குனர் சுப்பையன் ஆகியோர் திடீரென ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வின்போது அங்கு மேற்கொள்ளப்படும் பணிகள், எந்திரங்களின் செயல்பாடுகள், திரவ உயிர்உரம் தயாரிப்பு, விற்பனை போன்றவை குறித்து அதிகாரிகள் கேட்டறிந்தனர். அப்போது, அமரபூண்டி, ஆயக்குடி உள்பட பழனி வட்டார பகுதியிலுள்ள 22 சேகரிப்பு மையங்களில் இருந்து கொண்டுவரப்படும் காய்கறி, பழங்கள், இங்கு எந்திரம் மூலம் சுத்தம் செய்யப்பட்டு, பதப்படுத்தப்பட்டு விலை உள்ளபோது விற்பனை செய்யப்படுவதாகவும், விவசாயிகளுக்கான தங்கும் அறை, வங்கி போன்ற வசதிகள் இங்கு செய்யப்பட உள்ளதாகவும், இந்த நிலையம் உழவர் உற்பத்தியாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டு செயல்படும் என்றும் துணை இயக்குனர் சாத்தப்பன் (வேளாண் வணிகம்) விளக்கி கூறினார்.
இந்த ஆய்வின்போது பழனி சப்-கலெக்டர் அருண்ராஜ், வேளாண்மை இணை இயக்குனர் சுருளியப்பன், பழனி வட்டார வேளாண் அலுவலர் மீனாகுமாரி ஆகியோர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story