பழனி அருகே பரிதாபம், பள்ளி வேன் மோதியதில் போலீஸ்காரரின் மகன் பலி


பழனி அருகே பரிதாபம், பள்ளி வேன் மோதியதில் போலீஸ்காரரின் மகன் பலி
x
தினத்தந்தி 21 Jun 2019 4:15 AM IST (Updated: 21 Jun 2019 5:44 AM IST)
t-max-icont-min-icon

பழனி அருகே பள்ளி வேன் மோதியதில் போலீஸ்காரரின் 2 வயது மகன் பரிதாபமாக இறந்தான்.

கீரனூர், 

பழனி அருகே உள்ள சரவணபட்டியை சேர்ந்தவர் சுரேஷ். இவர் அம்பிளிக்கை போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மனைவி சுதா, மகன் ஆதிஸ் (வயது 2). சுரேசின் சகோதரியான வனிதா அதே பகுதியில் வசித்து வருகிறார். வனிதாவின் மகன் பழனியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படிக்கிறார்.

இந்த நிலையில் வனிதா தனது மகனை தினந்தோறும் சுரேஷ் வீட்டு முன்பு வைத்து பள்ளி வேனில் ஏற்றிவிடுவது வழக்கம். அதன்படி நேற்று வழக்கம் போல் வனிதா தனது மகனுடன், சுரேஷ் வீட்டு முன்பு பள்ளி வேனுக்காக நின்று கொண்டிருந்தார். அவர்களுடன் ஆதிசும் நின்றான். பள்ளி வேன் வந்ததும் வனிதா தனது மகனை வேனில் ஏற்றிவிட்டார்.

அப்போது ஆதிஸ் திடீரென பள்ளி வேன் முன்பு சென்று விட்டான். அதை கவனிக்காத டிரைவர் வேனை இயக்கினார். அப்போது வேன் மோதி ஆதிசின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து ஆதிசை மீட்டு சிகிச்சைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே ஆதிஸ் பரிதாபமாக இறந்தான். இந்த சம்பவம் குறித்து அறிந்த கீரனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் குமரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். மேலும் பள்ளி வேன் டிரைவரான கோரிக்கடவை சேர்ந்த பிரபு (32) என்பவரை கைது செய்தார். பள்ளி வேன் மோதி குழந்தை இறந்த சம்பவம் சரவணம்பட்டி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. 

Next Story