எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்பிற்கு நியமிக்கப்பட்ட ஆசிரியை வராததால் பள்ளி முற்றுகை பனப்பாக்கம் அருகே பரபரப்பு


எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்பிற்கு நியமிக்கப்பட்ட ஆசிரியை வராததால் பள்ளி முற்றுகை பனப்பாக்கம் அருகே பரபரப்பு
x
தினத்தந்தி 21 Jun 2019 10:45 PM GMT (Updated: 2019-06-21T19:07:28+05:30)

பனப்பாக்கம் அருகே அரசு பள்ளியில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்பிற்கு நியமிக்கப்பட்ட ஆசிரியை வராததால் பொதுமக்கள் பள்ளியை முற்றுகையிட்டனர்.

பனப்பாக்கம், 

வேலூர் மாவட்டம் பனப்பாக்கத்தை அடுத்த துறையூர் கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த ஆண்டு தமிழகத்தில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் தொடங்க அரசு உத்தரவிட்டது.

அதன்படி, வேலூர் மாவட்டத்தில் 171 அரசு பள்ளிகளில் நெமிலி ஒன்றியத்தில் மட்டும் 8 பள்ளிகள் அடங்கும். இந்த 8 பள்ளிகளுக்கு தலா ஒரு ஆசிரியர் வீதம் 8 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். இதில் ஒரு ஆசிரியர், 7 ஆசிரியைகள் ஆவர். கடந்த 3–ந் தேதி பள்ளி திறந்தவுடன் தமிழக அரசு உத்தரவிட்ட பள்ளிகளில் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் தொடங்கப்பட்டது.

இந்த நிலையில் துறையூர் அரசு பள்ளியில் 18–க்கும் மேற்பட்ட மாணவர்கள் எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்பில் சேர்ந்தனர். ஆனால் நியமிக்கப்பட்ட ஆசிரியை இதுவரை பள்ளிக்கு வரவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் நேற்று திடீரென பள்ளியை முற்றுகையிட்டனர்.

இதுபற்றி தகவல் அறிந்ததும் அரக்கோணம் மாவட்ட கல்வி அலுவலர் (பொறுப்பு) புண்ணியக்கோட்டி, நெமிலி வட்டார கல்வி அலுவலர்கள் சம்பத்குமார், ஜெயராஜ் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதைத் தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story