ஓசூர், சூளகிரி பகுதிகளில் வேளாண்மை திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு
ஓசூர், சூளகிரி பகுதிகளில் வேளாண்மை திட்ட பணிகளை கலெக்டர் பிரபாகர் ஆய்வு செய்தார்.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர், சூளகிரி ஒன்றியங்களுக்குட்பட்ட சின்னார், சூடகொண்டபள்ளி, பெருமாள்பள்ளி, அச்செட்டிப்பள்ளி, சூதாளம் ஆகிய பகுதிகளில், வேளாண்மைத்துறை சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களை மாவட்ட கலெக்டர் பிரபாகர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- மாவட்டத்தில் வேளாண்மைத்துறை சார்பில் எண்ணற்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில் சூளகிரி ஒன்றியத்திற்குட்பட்ட சின்னார் பகுதியில் கூட்டுப்பண்ணை திட்டம் 2018-19 நிதியாண்டில் விவசாயிகளை ஒருங்கிணைந்து குழுக்களாக உருவாக்கி அக்குழுக்கள் மூலம் விவசாய உற்பத்தி பொருட்களை அவர்களே விலை நிர்ணயம் செய்து கொள்ளலாம். இப்பகுதியில் மட்டும் 5 குழுக்களுக்கு தலா 5 லட்சம் வீதம் மொத்தம் 25 லட்ச ரூபாய் அளவிற்கு மானியம் வழங்கப்பட்டுள்ளது.
அதேபோல், ஓசூர் ஒன்றியம் சூடகொண்டபள்ளி கிராமத்தில் நீடித்த மானாவாரி விவசாயத்திற்கான இயக்கத்தின் கீழ் 8 மானாவாரி விவசாயிகள் குழுக்கள் உருவாக்கப்பட்டு கூட்டுறவு சங்க சட்ட விதிகளின் கீழ் பதிவு செய்யப்படுகின்ற குழுவிற்கு ரூ.8 லட்சம் மானியமாக வேளாண் கருவிகள் வாடகை மையம் அமைப்பதற்கு வழங்கப்பட்டுள்ளது.
பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டம் மாவட்டத்தில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுவரை 1 லட்சத்து 29 ஆயிரம் விவசாயிகள் வங்கி கணக்கு பெற்று இத்திட்டத்தின் மத்திய அரசின் இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது இத்திட்டத்தில் பெரிய விவசாயிகளையும் இணைக்க தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். விவசாயிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி தங்கள் வங்கி கணக்கு விவரங்களை சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலர்களிடம் கொடுத்து பயன்பெற வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் பிரபாகர் கூறினார்.
இந்த ஆய்வின்போது, வேளாண்மைத்துறை துணை இயக்குனர் அகண்டராவ், உதவி இயக்குனர்கள் புவனேஸ்வரி, மனோகரன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சேகர், வேளாண்மை அலுவலர்கள் அருள்தாஸ், கணேஷ்குமார், பன்னீர்செல்வம், செல்வராஜ், ரேணுகா, ஓசூர் தாசில்தார் முத்துப்பாண்டி மற்றும் துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story