சர்வதேச யோகா தினத்தையொட்டி மன்னார்குடியில், யோகா நிகழ்ச்சி 150 மாணவ-மாணவிகள் பங்கேற்பு


சர்வதேச யோகா தினத்தையொட்டி மன்னார்குடியில், யோகா நிகழ்ச்சி 150 மாணவ-மாணவிகள் பங்கேற்பு
x
தினத்தந்தி 22 Jun 2019 4:30 AM IST (Updated: 21 Jun 2019 10:50 PM IST)
t-max-icont-min-icon

சர்வதேச யோகா தினத்தையொட்டி மன்னார்குடியில், யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் 150 மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.

மன்னார்குடி,

தேசிய மாணவர் படை 8-வது பட்டாலியன் படை சார்பில் மன்னார்குடி தேசிய மேல்நிலைப்பள்ளியில் யோகா நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மன்னார்குடி தேசிய மேல்நிலைப்பள்ளி, பின்லே மேல்நிலைப்பள்ளி, மன்னார்குடி ராஜகோபாலசுவாமி அரசு கலைக்கல்லூரி மற்றும் தேசிய மேல்நிலைப்பள்ளி நாட்டுநலப்பணித்திட்ட மாணவர்கள் என 150 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சிக்கு பள்ளியின் தலைமை ஆசிரியர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். 8-வது பட்டாலியன் ஹவில்தார் முருகன், திருவாரூர் மாவட்ட நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜப்பா, ஈஷா யோகா மைய தன்னார்வலர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முன்னதாக அரசு கலைக்கல்லூரி என்.சி.சி. அலுவலர் ராஜன் வரவேற்றார். பள்ளி தாளாளர் ராமநாத உடையார் யோகா தின நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். பின்லே பள்ளி என்.சி.சி. அலுவலர் டேனியல்ராஜாஜி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். நிகழ்ச்சியில் தேசிய பள்ளி என்.சி.சி., என்.எஸ்.எஸ்., பின்லே பள்ளி என்.சி.சி., அரசு கலைக்கல்லூரி என்.சி.சி. மாணவ-மாணவிகள் பங்கேற்று சூரிய நமஸ்காரம், ஆசனங்கள், தியானம் ஆகிய பயிற்சிகளை மேற்கொண்டனர்.

தொடர்ந்து தேசிய மேல் நிலைப்பள்ளி நாட்டு நலப்பணித்திட்டம், தேசிய மாணவர் படை சார்பாக சர்வதேச யோகா தினம் குறித்த ஓவியம், பேச்சு, கட்டுரை போட்டி உள்பட பல்வேறு போட்டிகள் நடைபெற்றன. இதில் பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ்களும், பரிசுகளும் வழங்கப்பட்டன.

Next Story