நீடாமங்கலத்தில் 1 மணி நேரம் ரெயில்வே கேட் மூடப்பட்டது பயணிகள் அவதி
நீடாமங்கலத்தில் 1 மணி நேரம் ரெயில் கேட் மூடப்பட்டதால் பயணிகள் பெரும் அவதிப்பட்டனர்.
நீடாமங்கலம்,
நீடாமங்கலத்தில் நேற்று காலை 6.35 மணிக்கு சரக்கு ரெயிலுக்கான என்ஜின் இணைப்பு பணி, காரைக்கால் பயணிகள் ரெயில் வருகை, செம்மொழி எக்ஸ்பிரஸ் ரெயில் வருகை மற்றும் என்ஜின் திசை மாற்றும் பணி ஆகியவற்றிக்காக ரெயில்வே கேட் மூடப்பட்டது. பின்னர் காலை 7.35 மணிக்கு தான் கேட் திறக்கப்பட்டது.
1 மணி நேரம் ரெயில்வே கேட் மூடப்பட்டதால் ரெயில்வே கேட்டின் இருபுறமும் பஸ்கள், லாரிகள், வேன்கள் உள்ளிட்ட எண்ணற்ற வாகனங்கள் அணிவகுத்து நின்றன. ஆதலால் பயணிகள் பெரிதும் அவதிப்பட்டனர்.
இதுகுறித்து ரெயில் பயணிகள் கூறியதாவது:-
நீடாமங்கலம் வழியாக பயணிகள் ரெயில்கள், எக்ஸ்பிரஸ் ரெயில்கள், சரக்கு ரெயில்கள் என எண்ணற்ற ரெயில்கள் தினமும் சென்று வருகின்றன. இதனால் ரெயில்வே கேட் அடிக்கடி மூடப்படுகிறது. அவ்வாறு மூடப்படும் நேரம் எல்லாம் சாலையில் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவது தொடர் கதையாக உள்ளது.
இந்தசூழ்நிலையில் பயணிகள் நாள்தோறும் அவதிப்பட்டு வந்த நிலையை போக்கிட மத்திய, மாநில அரசுகள் நீடாமங்கலத்தில் மேம்பாலம் அமைக்கும் பணிக்காக நிதி ஒதுக்கீடு செய்தது. ஆனால் இந்த பணி தொடங்கவில்லை. தஞ்சை-நாகை வரையிலான இருவழிச்சாலை அமைந்தால் ஓரளவிற்கு நீடாமங்கலத்தின் போக்குவரத்து நெருக்கடியை சமாளிக்க முடியும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அந்த பணியும் கிடப்பில் போடப்பட்டுவிட்டது.
நீடாமங்கலத்தில் போக்குவரத்து நெருக்கடியை தவிர்க்கவும், பஸ் உள்ளிட்ட இதர வாகன பயணிகள் நீண்ட நேரம் காத்திருந்து செல்ல வேண்டிய நிலையை போக்கவும் மத்திய, மாநில அரசுகள் மேம்பாலம் அமைக்கும் பணியை உடனே தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story