ரத்ததானம் செய்ய அனைவரும் முன் வர வேண்டும் திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பேச்சு
ரத்ததானம் செய்ய அனைவரும் முன் வர வேண்டும் என திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு துரை கூறினார்.
திருவாரூர்,
ரத்ததானம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் போலீசார் ரத்ததானம் செய்ய வேண்டும் என தமிழக அரசு அறிவித்து இருந்தது. அதன்படி கடந்த ஆண்டு முதல் தமிழகம் முழுவதும் போலீசார் ரத்ததானம் செய்து வருகின்றனர். அதன்படி இந்த ஆண்டு நேற்று திருவாரூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் ரத்ததான முகாம் நடந்தது. முகாமிற்கு திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு துரை தலைமை தாங்கி, ரத்தம் வழங்கி தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
கடந்த 2 ஆண்டுகளாக போலீசார் ரத்த தானம் செய்து வருகின்றனர். உயிர் காக்கும் ரத்தத்தை தானம் செய்ய அனைவரும் முன்வர வேண்டும். அதற்கு முன் உதாரணமாக போலீசார் ரத்தம் வழங்கியுள்ளனர்.
தற்போது 150 போலீசார் ரத்ததானம் செய்துள்ளனர். ரத்ததானம் குறித்து அனைவரும் விழிப்புணர்வு பெற வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அரசு மருத்துவக்கல்லூரி ரத்த வங்கி மருத்துவ குழுவினர் உதவியுடன் 150 போலீசார் ரத்தத்தை தானமாக வழங்கினர். இதில் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை நிலைய மருத்துவ அலுவலர் ரவீந்திரபாபு, கண்காணிப்பாளர் கண்ணன், ரத்த வங்கி அலுவலர் பிரதியுஷா, எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பின் மாவட்ட அமைப்பாளர் விஜி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story