யாதகிரி அருகே கிராம தரிசனம் திட்டம் தொடக்கம் முதல்-மந்திரி குமாரசாமி பொதுமக்களிடம் நேரில் குறைகளை கேட்டறிந்தார்
யாதகிரி அருகே குக்கிராமத்தில் முதல்-மந்திரி குமாரசாமி கிராம தரிசன திட்டத்தை நேற்று தொடங்கினார். பின்னர் அந்த பகுதி மக்களிடம் நேரில் குறைகளை கேட்டறிந்த அவர், இரவில் அங்குள்ள அரசு பள்ளிக்கூடத்தில் தங்கினார்.
பெங்களூரு,
யாதகிரி அருகே குக்கிராமத்தில் முதல்-மந்திரி குமாரசாமி கிராம தரிசன திட்டத்தை நேற்று தொடங்கினார். பின்னர் அந்த பகுதி மக்களிடம் நேரில் குறைகளை கேட்டறிந்த அவர், இரவில் அங்குள்ள அரசு பள்ளிக்கூடத்தில் தங்கினார்.
கிராம தரிசனம்
கிராமங்களை வளர்ச்சி அடைய வைக்கும் நோக்கில் கிராம தரிசனம் திட்டத்தை கடந்த 2006-ம் ஆண்டு முதல்-மந்திரியாக இருந்த போது குமாரசாமி நடத்தினார். அதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. இதைதொடர்ந்து தற்போது முதல்-மந்திரியாக அவர் பதவி ஏற்றதை தொடர்ந்து கிராம தரிசன திட்டத்தின் 2-வது கட்ட சுற்றுப்பயணத்தை ஜூன் 21-ந்தேதி (அதாவது நேற்று) தொடங்குவதாக அவர் அறிவித்தார்.
அதன்படி யாதகிரி மாவட்டம் குருமிட்கல் தாலுகாவில் உள்ள குக்கிராமமான சன்டரகியில் கிராம தரிசன திட்டத்தை தொடங்கினார். இதற்காக அவர் நேற்று முன்தினம் இரவு பெங்களூருவில் இருந்து கர்நாடக எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் யாதகிரிக்கு சென்றார். அங்கு ரெயில் நிலையத்தில் குமாரசாமிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து அவர் அங்குள்ள விருந்தினர் மாளிகைக்கு சென்று சிறிது நேரம் ஓய்வு எடுத்தார். அதன் பிறகு சன்டரகி கிராமத்திற்கு அரசு பஸ்சில் சென்றார். அங்கு அவருக்கு பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது. கிராம தரிசன திட்ட தொடக்க விழா நடைபெற்றது. இதில் குமாரசாமி பங்கேற்று, திட்டத்தை தொடங்கி வைத்து பேசியதாவது:-
300 படுக்கைகள்
நான் முன்பு 2006-ம் ஆண்டு முதல்-மந்திரியாக இருந்தபோது கிராம தரிசன திட்டத்தை தொடங்கினேன். கிராமங்களில் தங்கி அங்குள்ள பிரச்சினைகளை அறிந்து தீர்க்க நடவடிக்கை எடுத்தேன். இனி மாதத்திற்கு ஒரு கிராமத்தில் தங்குவேன். அங்குள்ள பிரச்சினைகளை தீர்ப்பேன். மக்களின் கோரிக்கையை ஏற்று கால்நடை மருத்துவ மையத்தை தொடங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
யாதகிரியில் உள்ள மாவட்ட அரசு ஆஸ்பத்திரிக்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்படும். இந்த ஆஸ்பத்திரிக்கான தொடர்பு சாலைகள் மேம்படுத்தப் படும். யாதகிரியில் 300 படுக்கைகள் கொண்ட ஆஸ்பத்திரியை தொடங்க இன்று (அதாவது நேற்று) உத்தரவிட்டுள்ளேன். சகாப்புரா நகரில் பாதாள சாக்கடை திட்டத்தை செயல்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.
குறைகளை கேட்டறிந்தார்
விவசாய கடன் தள்ளுபடி திட்டத்தில் யாதகிரி மாவட்டத்திற்கு ரூ.302 கோடி நிதி விடுவிக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் இதுவரை 75 ஆயிரம் விவசாயிகள் பயன் பெற்றுள்ளனர். விவசாயிகளுக்கு புதிய கடன் வழங்க ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஐதராபாத்-கர்நாடக பகுதியில் தொழிற்சாலைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.
இவ்வாறு குமாரசாமி பேசினார்.
இதில் கனிம சுரங்கம் மற்றும் நில அறிவியல் துறை மந்திரி ராஜசேகரபட்டீல் மற்றும் பல்வேறு துறை உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர். இந்த விழாவுக்கு பிறகு குமாரசாமி பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அவர்கள் வழங்கிய மனுக்களை பெற்றார். இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் அதிகளவில் குவிந்தனர். இதனால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கூட்டத்தினரை போலீசார் கட்டுப்படுத்தினர்.
போலீஸ் பாதுகாப்பு
மனுக்கள் பெறும் நிகழ்ச்சி முடிந்த பிறகு குமாரசாமி அதே கிராமத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் தங்கினார். முதல்-மந்திரிக்காக நவீன கழிவறை அமைக்கப்பட்டது. அந்த பள்ளி கட்டிடம் புதுப்பொழிவுடன் காணப்பட்டது. முதல்-மந்திரி அங்கு தங்கியதை அடுத்து அந்த கிராமத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
குமாரசாமி இன்று (சனிக்கிழமை) காலை கலபுரகி மாவட்டத்தில் அப்சல்புரா தாலுகாவில் உள்ள ஹெரூர் கிராமத்திற்கு சென்று தங்குகிறார். அங்கும் மக்களின் குறைகளை கேட்டறிய உள்ளார். முதல்-மந்திரி வருகையை முன்னிட்டு அந்த கிராமம் விழாக்கோலம் பூண்டுள்ளது.
Related Tags :
Next Story