நடிகர் சங்க தேர்தலில் அரசு தலையிடவில்லை அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி


நடிகர் சங்க தேர்தலில் அரசு தலையிடவில்லை அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி
x
தினத்தந்தி 22 Jun 2019 3:30 AM IST (Updated: 22 Jun 2019 12:20 AM IST)
t-max-icont-min-icon

நடிகர் சங்க தேர்தலில் அரசு தலையிடவில்லை என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.

தூத்துக்குடி, 

நடிகர் சங்க தேர்தலில் அரசு தலையிடவில்லை என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ கூறினார்.

தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ தூத்துக்குடியில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

எதிர்க்கட்சியினர் கடமை

தூத்துக்குடி மாநகராட்சியில் 4-வது குடிநீர் குழாய் திட்டம் செயல்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 82 மில்லியன் லிட்டர் குடிநீரை கொண்டு வரும் திட்டமாக வடிவமைக்கப்பட்டு உள்ளது. ஆனால் மாநகராட்சிக்கு தினமும் 52 மில்லியன் லிட்டர் குடிநீர் தேவை. தற்போது 35 மில்லியன் லிட்டர் தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. இதேபோல் கோவில்பட்டி நகரம் தினசரி குடிநீர் பெறும் நகரமாக மாற்றப்பட்டு உள்ளது. முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா தொலைநோக்கு திட்டங்களை தந்து உள்ளார்.

குடிநீர் பிரச்சினையை காரணம் காட்டி எதிர்க்கட்சியினர் பல்வேறு போராட்டங்களை நடத்துகின்றனர். பருவமழை தவறும் பட்சத்தில் அரசுக்கு நல்ல ஆலோசனை வழங்குவதுதான் எதிர்க்கட்சியினர் கடமை. மக்களிடம் பீதியை ஏற்படுத்தக்கூடாது. ஆனால் இதனை அரசியல் ஆதாயமாக கருதி ஆர்ப்பாட்டம் நடத்துகின்றனர். அ.தி.மு.க. அரசு குடிநீர் பிரச்சினையை தீர்க்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

ஸ்டாலின் குறை கூறுகிறார்

தூத்துக்குடி மாநகராட்சியில் நீர் சேமிப்பு விழிப்புணர்வு குறுந்தகடு வெளியிடப்பட்டு உள்ளது. இதன்மூலம் தூத்துக்குடி தமிழகத்துக்கே வழிகாட்டியாக அமைந்து உள்ளது. ஜெயலலிதா ஆட்சியில் குடிமராமத்து திட்டம் வந்த பிறகுதான் 82 ஆண்டு கால வரலாற்றில் மேட்டூர் அணை தூர்வாரப்பட்டது. தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலைகள் தூர்வாரப்பட்டன. தற்போதும் ரூ.500 கோடி குடிமராமத்து பணிக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

இதனையும் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் குறை கூறி வருகிறார். அவர் அரசுக்கு ஒத்துழைத்து மக்களுக்கு பணியாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்படவில்லை. அதைப்பற்றி நாங்கள் கவலைப்படவில்லை. ஆலந்தலையில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் கைவிடப்படவில்லை.

தலையிடவில்லை

தென்னிந்திய நடிகர் சங்கம் என்பது ஒரு தனிப்பட்ட அமைப்பு. அதில் தலையிடுவதற்கான அவசியம் அ.தி.மு.க.வுக்கோ, அரசுக்கோ இல்லை. நடிகர் சங்க தேர்தலில் அரசு தலையிடவில்லை. கடந்த முறை நடந்த தேர்தலில் போட்டியிட்ட சரத்குமார் அ.தி.மு.க. ஆதரவு எம்.எல்.ஏ.வாக இருந்தார். ராதாரவி அ.தி.மு.க. பேச்சாளராக இருந்தார். அன்று அரசு தலையிட்டு இருந்தால் அவர்கள்தான் வெற்றி பெற்று இருக்க வேண்டும். ஆனால் அரசுக்கு இது தேவை இல்லாத விஷயம். நடிகர் சங்கத்துக்கோ, அவர்களின் தொழிலுக்கோ ஏதேனும் பிரச்சினை வந்தால் மட்டுமே அதை தீர்க்க அரசு நடவடிக்கை எடுக்கும். நாசரே நடிகர் சங்க தேர்தலில் அரசு தலையிடுவதாக நாங்கள் நினைக்கவில்லை என்று கூறி இருக்கிறார். அதுதான் உண்மை.

இவ்வாறு அவர் கூறினார்.

கோவில்பட்டியில்...

பின்னர் அவர் கோவில்பட்டியில் நிருபர்களிடம் கூறுகையில், “முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா மழைநீர் சேமிப்பு திட்டத்தை இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழகத்தில் கொண்டு வந்தார். அப்போது இதனை எதிர்க்கட்சியை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி பல்வேறு அமைப்பினரும் விமர்சனம் செய்தனர். இன்று மழைநீர் சேமிப்பு திட்டம் அவசியம் என்பதை மக்கள் உணர்ந்துள்ளனர். கடந்த 2 ஆண்டுகளாக வடகிழக்கு மற்றும் தென்மேற்கு பருவமழை சராசரி அளவை விட குறைவாக பெய்துள்ளது. இதனால் நிலத்தடி நீர் குறைந்து உள்ளது. இது தமிழகத்தில் மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவிலும் இந்த பிரச்சினை வந்துள்ளது. இதனை எதிர்கொள்ளும் வகையில் தேர்தல் நடத்தை விதிகள் முடிவுக்கு வந்ததும் முதல்-அமைச்சர் உடனடியாக குடிநீர் பிரச்சினையை தீர்க்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசனை நடத்தினார். முழுவீச்சில் அரசு எந்திரம் முடுக்கிவிடப்பட்டு நிலைமையை சமாளிப்பதற்கு நடவடிக்கை எடுக் கப்பட்டுள்ளது” என்றார்.

Next Story