ராசிபுரம் பகுதியில் அனுமதியின்றி இயங்கிய 11 சாயப்பட்டறைகள் இடித்து அகற்றம் மாசுகட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் அதிரடி


ராசிபுரம் பகுதியில் அனுமதியின்றி இயங்கிய 11 சாயப்பட்டறைகள் இடித்து அகற்றம் மாசுகட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் அதிரடி
x
தினத்தந்தி 21 Jun 2019 10:30 PM GMT (Updated: 2019-06-22T00:29:47+05:30)

ராசிபுரம் பகுதியில் அனுமதியின்றி இயங்கிய 11 சாயப்பட்டறைகளை மாசு கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் அதிரடியாக இடித்து அகற்றினார்கள்.

ராசிபுரம், 

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் அனுமதியின்றி சாயப்பட்டறைகள் இயங்கி வருவதாக புகார்கள் வந்தது. இதையொட்டி கலெக்டர் ஆசியா மரியம் உத்தரவின்பேரில், மாவட்ட ஒருங்கிணைப்பு குழுவின் பரிந்துரையின்படி மாவட்ட மாசு கட்டுப்பாட்டு துறையின் நாமக்கல் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ரவிக்குமார், பறக்கும்படை அதிகாரி (ஈரோடு) சுவாமிநாதன் மற்றும் ரவிச்சந்திரன் அடங்கிய குழுவினர் ராசிபுரம் அருகேயுள்ள கூனவேலம்பட்டி புதூர் கிராமத்தில் அனுமதியின்றி இயங்கி வந்த 3 சாயப்பட்டறைகளை பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றினார்கள்.

இதனால் நெசவாளர்கள் அதிகம் வசிக்கும் அந்தக் கிராமத்தில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது. மேலும் சாயப்பட்டறைகள் என்று நினைத்துக்கொண்டு கஞ்சித்தொட்டிகளை அப்புறப்படுத்தக்கூடாது என நெசவாளர்கள் அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டனர். அப்போது அனுமதியின்றி இயங்கும் சாயப்பட்டறைகளை மட்டுமே அப்புறப்படுத்துவோம் என்று அதிகாரிகள் அவர்களிடத்தில் எடுத்துக் கூறினார்கள்.

அதேபோல் ராசிபுரம் காட்டூர் பகுதியில் அனுமதியின்றி இயங்கி வந்த 7 சாயப்பட்டறைகளையும், சந்திரசேகரபுரம் கிராமத்தில் இயங்கி வந்த ஒரு சாயப்பட்டறை உள்பட மொத்தம் 11 சாயப்பட்டறைகளை நேற்று மாசு கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றி அப்புறப் படுத்தினார்கள்.

அதிகாரிகளின் இந்த நடவடிக்கையின்போது அசம்பாவிதம் எதுவும் நடைபெறாமல் இருக்க ராசிபுரம் மற்றும் புதுச்சத்திரம் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனித்தனர்

Next Story