ஏரல் அருகே பரிதாபம் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி புதுமாப்பிள்ளை பலி


ஏரல் அருகே பரிதாபம் மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி புதுமாப்பிள்ளை பலி
x
தினத்தந்தி 22 Jun 2019 3:30 AM IST (Updated: 22 Jun 2019 12:30 AM IST)
t-max-icont-min-icon

ஏரல் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் புதுமாப்பிள்ளை பரிதாபமாக இறந்தார்.

ஏரல், 

ஏரல் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் புதுமாப்பிள்ளை பரிதாபமாக இறந்தார்.

என்ஜினீயர்

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பண்டிதர் தெருவை சேர்ந்தவர் செல்வவிநாயகம். இவருடைய மகன் அருண்கிருஷ்ணன் (வயது 26). இவர் ஆறுமுகநேரி அருகே உள்ள தனியார் தொழிற்சாலையில் என்ஜினீயராக பணியாற்றி வந்தார். நேற்று மதியம் இவர் அலுவலகத்துக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்றார்.

தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அலுவலகம் அருகே ஆறுமுகமங்கலம் விலக்கு பகுதியில் அவர் சென்று கொண்டு இருந்தார்.

அப்போது வாழவல்லானில் இருந்து ஆறுமுகமங்கலம் நோக்கி வந்த லாரி, எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

பரிதாப சாவு

இதில் அருண்கிருஷ்ணன் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த ஏரல் போலீஸ் இன்ஸ்பெக்டர் பட்டாணி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, லாரியை ஓட்டி வந்த சாத்தூர் தாலுகா வேலாயுதம்பண்ணையை சேர்ந்த முத்துராமலிங்கம் என்பவரை தேடி வருகின்றனர். விபத்தில் இறந்த அருண்கிருஷ்ணனுக்கும், உறவுக்கார பெண்ணான மோனிஷா (23) என்பவருக்கும் கடந்த 29 நாட்களுக்கு முன்பு தான் திருமணம் நடந்தது குறிப்பிடத்தக்கது.

Next Story