தூத்துக்குடி அருகே கார்-மோட்டார் சைக்கிள் மோதல்; பெண் பலி கணவர் படுகாயம்
தூத்துக்குடி அருகே கார்-மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் பெண் பலியானார். படுகாயம் அடைந்த அவருடைய கணவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
ஓட்டப்பிடாரம்,
தூத்துக்குடி அருகே கார்-மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் பெண் பலியானார். படுகாயம் அடைந்த அவருடைய கணவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
துறைமுக ஊழியர்
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே உள்ள கச்சேரி தளவாய்புரத்தைச் சேர்ந்தவர் பொன்ராஜ் (வயது 55). இவர் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி சுப்பம்மாள் (54). நேற்று மதியம் பொன்ராஜ் தன்னுடைய மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் தூத்துக்குடிக்கு புறப்பட்டு சென்றார்.
தூத்துக்குடி அருகே சுங்கச்சாவடி பகுதியில் சென்றபோது, பொன்ராஜின் செல்போன் ஒலித்தது. இதனால் மோட்டார் சைக்கிளை சாலையோரமாக நிறுத்தி விட்டு, பொன்ராஜ் செல்போனில் பேசினார். அப்போது மேல அரசடியில் இருந்து தூத்துக்குடி நோக்கி சென்ற கார் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிளின் பின்புறம் பயங்கரமாக மோதியது.
டிரைவர் கைது
இந்த விபத்தில் சாலையில் தூக்கி வீசப்பட்ட சுப்பம்மாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பலத்த காயம் அடைந்த பொன்ராஜ் உயிருக்கு போராடியவாறு கிடந்தார். விபத்து குறித்து தகவல் அறிந்ததும், புதியம்புத்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். படுகாயம் அடைந்த பொன்ராஜை சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. விபத்தில் இறந்த சுப்பம்மாளின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, கார் டிரைவரான தூத்துக்குடி போல்பேட்டையைச் சேர்ந்த பாலகிருஷ்ணனை கைது செய்தனர்.
Related Tags :
Next Story