எட்டயபுரத்தில் விபத்து போலீஸ்காரர் உள்பட 6 பேர் படுகாயம் லாரி மீது பஸ் மோதியது
எட்டயபுரத்தில் லாரி மீது பஸ் மோதிய விபத்தில் போலீஸ்காரர் உள்பட 6 பேர் படுகாயம் அடைந்தனர்.
எட்டயபுரம்,
எட்டயபுரத்தில் லாரி மீது பஸ் மோதிய விபத்தில் போலீஸ்காரர் உள்பட 6 பேர் படுகாயம் அடைந்தனர்.
விபத்து
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் இருந்து நேற்று காலையில் தனியார் பஸ் ஒன்று கோவில்பட்டி நோக்கி புறப்பட்டு சென்றது. தூத்துக்குடி- மதுரை பைபாஸ் ரோட்டில் பஸ் சென்று கொண்டு இருந்தது. பஸ்சை விளாத்திகுளத்தை சேர்ந்த சுரேஷ் என்பவர் ஓட்டினார்.
எட்டயபுரம் ஊருக்குள் செல்ல வேண்டும் என்பதால் அந்த பஸ் பைபாஸ் ரோட்டை கடக்க முயன்றது. அப்போது எதிர்பாராதவிதமாக பஸ், மதுரையில் இருந்து தூத்துக்குடி நோக்கி வந்த லாரியின் பக்கவாட்டில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் பஸ்சின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கி சேதம் அடைந்தது.
6 பேர் படுகாயம்
பஸ்சில் இருந்த நாகலாபுரத்தை சேர்ந்த சங்கரலிங்கம் மகன் பால்ராஜ் (வயது 32), விளாத்திகுளம் குறிஞ்சிநகரை சேர்ந்த முருகன் மனைவி அவ்வை (55), சின்னவநாயக்கன்பட்டியை சேர்ந்த பஸ் கண்டக்டர் ஜெயராஜ் மகன் தயாநிதி (27), விளாத்திகுளத்தை சேர்ந்த மாடசாமி மகள் புவனேசுவரி (18), கமலாபுரத்தை சேர்ந்த சண்முகம் மனைவி சண்முகலட்சுமி (54), பிள்ளையார்நத்தத்தை சேர்ந்த கணேசபெருமாள் மகள் வைஷ்ணவி (13) ஆகிய 6 பேர் படுகாயம் அடைந்தனர். பஸ் டிரைவர் காயம் இன்றி தப்பினார்.
காயம் அடைந்த 6 பேரும் எட்டயபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவர்களில் பால்ராஜ் விளாத்திகுளம் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விபத்து குறித்து எட்டயபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story