திருச்செந்தூரில் வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட அபராத தொகை போலி ஆவணம் தயாரித்து மோசடி போலீஸ் ஏட்டு மீது வழக்கு


திருச்செந்தூரில் வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட அபராத தொகை போலி ஆவணம் தயாரித்து மோசடி போலீஸ் ஏட்டு மீது வழக்கு
x
தினத்தந்தி 22 Jun 2019 3:30 AM IST (Updated: 22 Jun 2019 12:54 AM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூரில் வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட அபராத தொகை கோர்ட்டில் செலுத்தப்படாமல் மோசடி செய்யப்பட்டது. இதுதொடர்பாக போலீஸ் ஏட்டு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

தூத்துக்குடி, 

திருச்செந்தூரில் வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட அபராத தொகை கோர்ட்டில் செலுத்தப்படாமல் மோசடி செய்யப்பட்டது. இதுதொடர்பாக போலீஸ் ஏட்டு மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

போலீஸ் ஏட்டு

திருச்செந்தூர் போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் கடந்த 1-1-2018 முதல் 31-10-18 வரை எழுத்தராக ஏட்டு ரஞ்சித்குமார் (வயது 34) என்பவர் பணியாற்றி வந்தார். இவர் கோர்ட்டு பணிகளையும் கவனித்து வந்தார். அந்த காலகட்டத்தில் குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக மொத்தம் 498 மோட்டார் வாகன வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இந்த வழக்குகளில் அபராத தொகையை கோர்ட்டில் செலுத்தினால் மட்டுமே அந்த வழக்கு முடிவுபெற்றதாக அறிவிக்கப்பட்டு கோர்ட்டு மூலம் வழக்கு முடிவு எண் வழங்கப்படும். அதன்படி 447 வழக்குகள் கோர்ட்டில் முடிக்கப்பட்டு, அதற்கான முடிவு எண் வழங்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து போலீஸ் நிலைய வழக்கு பதிவேட்டில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

அபராத தொகை மோசடி

இந்த நிலையில் மோட்டார் வாகன சிறுவழக்கு பதிவேடு, காவல் அறிவிப்பு மற்றும் உடனடி அபராத ரசீது ஆகியவை ஆய்வு செய்யப்பட்டன. அப்போது, பதிவேடுகளில் குறிப்பிடப்பட்டு இருந்த வழக்கு முடிவு எண்கள் போலி என்பது தெரியவந்தது. அந்த எண்களை கோர்ட்டிலும், இ-கோர்ட்டில் ஆன்லைன் மூலமும் ஆய்வு செய்தனர். வேறு போலீஸ் நிலையங்களில் உள்ள வழக்குகளுக்கு கோர்ட்டு மூலம் வழங்கப்பட்ட வழக்கு முடிவு எண்களை போக்குவரத்து போலீஸ் நிலைய வழக்குகளில் முடிவு எண்ணாக எழுதப்பட்டு இருப்பது தெரியவந்தது.

இதன்மூலம் போலி ஆவணங்கள் மற்றும் போலி கோர்ட்டு எண் மூலம், வழக்கில் சம்பந்தப்பட்டவர்களிடம் இருந்து அபராத தொகை வசூலித்து விட்டு, அதனை கோர்ட்டில் செலுத்தாமல் மோசடி செய்து இருப்பது தெரியவந்தது.

வழக்குப்பதிவு

இதுகுறித்து திருச்செந்தூர் போக்குவரத்து போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கருப்பசாமி, தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளிரம்பாவிடம் புகார் அளித்தார். அதன்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்த போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார்.

இதையடுத்து மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்னபூரணி விசாரணை நடத்தி, போலீஸ் ஏட்டு ரஞ்சித்குமார் மீது அரசு ஊழியர் போலி ஆவணங்கள் தயாரித்து அதனை அசல் போல பயன்படுத்தி போலி கணக்குகள் தயார் செய்து மோசடியில் ஈடுபட்டதாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். தற்போது போலீஸ் ஏட்டு ரஞ்சித்குமார் காடல்குடி போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.

Next Story