சர்வதேச யோகா தினத்தையொட்டி தஞ்சையில் யோகா நிகழ்ச்சி கலெக்டர்-டி.ஐ.ஜி. பங்கேற்பு


சர்வதேச யோகா தினத்தையொட்டி தஞ்சையில் யோகா நிகழ்ச்சி கலெக்டர்-டி.ஐ.ஜி. பங்கேற்பு
x
தினத்தந்தி 21 Jun 2019 10:45 PM GMT (Updated: 2019-06-22T01:09:26+05:30)

சர்வதேச யோகா தினத்தையொட்டி தஞ்சையில் நடந்த யோகா நிகழ்ச்சியில் கலெக்டர் அண்ணாதுரை, போலீஸ் டி.ஐ.ஜி. லோகநாதன் ஆகியோர் பங்கேற்றனர்.

தஞ்சாவூர்,

உலகம் முழுவதும் சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்பட்டது. யோகாவின் சிறப்புகளை வெளிப்படுத்தும் வகையிலும், சுற்றுலா பயணிகள் மற்றும் பொது மக்கள் யோகாவின் அவசியத்தை அறிந்து கொள்ளும் வகையிலும் மத்திய அரசு சுற்றுலா அமைச்சகத்தின் சார்பில் பல்வேறு நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி தஞ்சை தென்னகப்பண்பாட்டு மையத்தில் சர்வதேச யோகா தினத்தையொட்டி யோகா நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சியை கலெக்டர் அண்ணாதுரை தொடங்கி வைத்து யோகா பயிற்சி செய்தார்.

நிகழ்ச்சியில் தென்னகப் பண்பாட்டு மைய இயக்குனர் பாலசுப்பிரமணியன், மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ராமகிருஷ்ணன், மாவட்ட விளையாட்டு அலுவலர் பாபு மற்றும் அரசு அலுவலர்கள், மாணவ, மாணவிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். இவர்களுக்கு யோகா பற்றிய விளக்கமும், அதன் பயனும் குறித்து செயல்விளக்கத்துடன் யோகா பயிற்சியாளர்கள் பயிற்சி அளித்தனர். பின்னர் இசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

முன்னதாக கலெக்டர் அண்ணாதுரை கூறும்போது, யோகா பயிற்சி அனைத்து பள்ளிகளிலும் நீண்டகாலமாக போதிக்கப்பட்டு வருகிறது. உடல், பொருள், ஆவி அனைத்தும் ஒன்று சேர உழைக்க வேண்டும் என வகுப்பறையில் ஆசிரியர்கள் நம்மிடம் சொல்வார்கள். அந்த வகையில் உழைத்தால் நாம் எந்த ஒரு சாதனைகளையும் நிகழ்த்த முடியும். அதற்கு யோகா பயிற்சி நமக்கு உதவிகரமாக இருக்கும். இன்றைய காலகட்டத்தில் நம் அனைவருக்கும் அமைதி தேவைப்படுகிறது. அனைத்து தரப்பு மக்களுக்கும் தேவையான ஒரு அமைதியான சூழ்நிலையை நாம் உருவாக்க வேண்டும் என்றார்.

தஞ்சை ஆயுதப்படை மைதானத்தில் யோகா பயிற்சி முகாம் நடந்தது. இதில் தஞ்சை சரக போலீஸ் டி.ஐ.ஜி. லோகநாதன், போலீஸ் சூப்பிரண்டு மகேஸ்வரன், துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன் மற்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள், ஏட்டுகள், மகளிர் போலீசார், ஆயுதப்படை போலீசார் என ஏராளமானோர் கலந்து கொண்டு யோகா பயிற்சி செய்தனர்.

தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழகத்தில் மெய்யியல்துறை சார்பில் சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. இதற்கு துணைவேந்தர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கி பேசும்போது, யோகா என்பது வாழ்க்கை முறை. ஒரு மனிதன் நீண்டநாள் வாழ வேண்டும் என்றால் அனைவரும் யோகா செய்ய வேண்டும். எனவே மாணவர்கள் அளவோடு மூச்சை வெளியிடும் பயிற்சியை பெற்றால் நீண்டநாள் ஆரோக்கியமாக வாழலாம். யோகா பயிற்சிக்காக தமிழ்ப்பல்கலைக்கழகத்திற்கு ரூ.10 லட்சத்தை தமிழகஅரசு கடந்த ஆண்டு வழங்கியது. யோகா கலையை பரப்பும் வகையில் தஞ்சை மருத்துவக்கல்லூரி சாலையில் தமிழ்ப்பல்கலைக்கழகம் சார்பில் 200 பேர் அமர்ந்து யோகா செய்யக்கூடிய கூடம் அமைக்கப்பட்டு 3 மாதங்களுக்குள் திறக்கப்படும் என்றார்.

பின்னர் சுவாமி தயானந்தா மழலையர் பள்ளி, பிள்ளையார்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் யோகா கலையை செய்து காண்பித்தனர். இதில் ஒருங்கிணைப்பாளர் பாலசந்திரன், பல்கலைக்கழக பதிவாளர் முத்துக்குமார், ஆழியாறு அறிவு திருக்கோவில் விஷன் கல்வி மைய இயக்குனர் பெருமாள், உதவி பேராசிரியர்கள் பார்த்திபன், நல்லசிவம், இணை ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Next Story