வாசுதேவநல்லூர் அருகே லாரி - மோட்டார் சைக்கிள் மோதல்; டிரைவர் சாவு


வாசுதேவநல்லூர் அருகே லாரி - மோட்டார் சைக்கிள் மோதல்; டிரைவர் சாவு
x
தினத்தந்தி 22 Jun 2019 4:00 AM IST (Updated: 22 Jun 2019 1:11 AM IST)
t-max-icont-min-icon

வாசுதேவநல்லூர் அருகே லாரியும், மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் டிரைவர் பரிதாபமாக பலியானார்.

வாசுதேவநல்லூர், 

வாசுதேவநல்லூர் அருகே லாரியும், மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் டிரைவர் பரிதாபமாக பலியானார்.

வெளிநாட்டில் வேலை

விருதுநகர் மாவட்டம் ஓபிகிரு‌‌ஷ்ணாபுரம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ஜெயராமன் மகன் அருண்குமார்(வயது37). டிரைவர். இவர் வெளிநாட்டில் வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி கற்பகசித்ரா(28). தம்பதியருக்கு நிதி‌‌ஷ்குமார்(7), தேஜாஸ்ரீ ஆகிய 2 குழந்தைகள் உள்ளனர். அருண்குமார் வெளிநாட்டில் இருந்து விடுமுறைக்காக ஊருக்கு வந்திருந்தார். பின்னர் மனைவி மற்றும் குழந்தைகளுடன் நெல்லை மாவட்டம் புளியங்குடியில் உள்ள மாமனார் ஊருக்கு சென்றிருந்தார்.

நேருக்கு நேர் மோதல்

நேற்று காலையில் மனைவி, குழந்தைகளை விட்டு விட்டு, அவர் மோட்டார் சைக்கிளில் ஓபி கிரு‌‌ஷ்ணாபுரத்திலுள்ள வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார். காலை 6 மணியளவில் வாசுதேவநல்லூர் சிந்தாமணிபேரி புதூர் அருகே சென்றபோது, எதிரே ஒட்டன்சத்திரத்தில் இருந்து கேரளா நோக்கி லாரி ஒன்று வந்து கொண்டிருந்தது. கண் இமைக்கும் நேரத்தில் லாரியும், மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதி விபத்துக்கு உள்ளாகின.

சாவு

இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்ட அருண்குமார் பலத்த காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் பரிதாபமாக பலியானார். சம்பவ இடத்துக்கு வாசுதேவநல்லூர் போலீசார் விரைந்து சென்று அருண்குமார் உடலை கைப்பற்றி பரிசோதனைக்காக சிவகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து வாசுதேவநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, லாரி டிரைவரான ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த நவீன்குமாரை(35) பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story