போலீஸ் இன்ஸ்பெக்டரை கண்டித்து சேலத்தில் திருநங்கைகள் மறியல் போராட்டம்
போலீஸ் இன்ஸ்பெக்டரை கண்டித்து சேலத்தில் திருநங்கைகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சேலம்,
சேலம் பள்ளப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டரை கண்டித்து திருநங்கைகள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை.
இருப்பினும், சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு நேற்று காலை ஏராளமான திருநங்கைகள், கம்யூனிஸ்டு கட்சியினர் திரண்டனர். பின்னர் அவர்கள் பொதுமக்கள் மற்றும் திருநங்கைகள் மீது பொய் வழக்குப்பதிவு செய்வது மட்டுமல்லாமல், புகார் கொடுக்க வருபவர்களை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்வதாக மிரட்டும் பள்ளப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டரை கண்டித்தும், அவரை பணி இடைநீக்கம் செய்யக்கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சேலம் வடக்கு மாநகர செயலாளர் முருகேசன், மாவட்ட நிர்வாகி பிரவீன்குமார், திருநங்கைகள் சங்க நிர்வாகி ராதிகா ஆகியோர் தலைமையில் இந்த போராட்டம் நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து திருநங்கைகள், கம்யூனிஸ்டு கட்சியினர், ஆட்டோ மற்றும் கார் டிரைவர்கள் உள்பட பலர் திடீரென சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.
இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தியும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் கைது செய்யும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் அதிகாரிகள் எச்சரிக்கை செய்தனர். இதனால் போலீசாருக்கும், திருநங்கைகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து இன்ஸ்பெக்டர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி சிறிது நேரம் கோஷங்களை எழுப்பி போராட்டம் நடைபெற்றது. அதன்பிறகு அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றுவிட்டனர்.
இதுகுறித்து திருநங்கைகள் சிலர் கூறுகையில், நாங்கள் யாரையும் துன்புறுத்தவில்லை. சேலம் புதிய பஸ் நிலையத்தில் நின்றிருந்த திருநங்கை ஒருவரை இன்ஸ்பெக்டர் அடித்து உதைத்து பொய் வழக்கு போடுவதாக மிரட்டியுள்ளார். புகார் கொடுக்க வரும் பொதுமக்களையும் பொய் வழக்குப்பதிவு செய்துவிடுவதாகவும் மிரட்டி வருகிறார். எனவே, அவரை இடமாற்றம் செய்வதோடு அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.
Related Tags :
Next Story