குடிநீர் உறிஞ்சுவதற்கு பயன்படுத்திய 56 மின் மோட்டார்கள் பறிமுதல்


குடிநீர் உறிஞ்சுவதற்கு பயன்படுத்திய 56 மின் மோட்டார்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 22 Jun 2019 3:15 AM IST (Updated: 22 Jun 2019 1:46 AM IST)
t-max-icont-min-icon

சேலம் மாநகரில் குடிநீர் உறிஞ்சுவதற்கு பயன்படுத்திய 56 மின் மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

சேலம், 

சேலம் மாநகராட்சியில் 4 மண்டலங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் தனிகுடிநீர் திட்டத்தின் மூலம் 56 மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளில் இருந்து பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

மாநகராட்சியின் 60 வார்டுகளில் 1 லட்சத்து 9 ஆயிரத்து 90 எண்ணிக்கையில் வீட்டு குடிநீர் இணைப்புகள், 1,310 எண்ணிக்கையில் வணிக நிறுவனங்களுக்கான குடிநீர் இணைப்புகள் மற்றும் 6,710 எண்ணிக்கையில் பொது குடிநீர் குழாய் இணைப்புகளும் என மொத்தம் 1 லட்சத்து 17 ஆயிரத்து 110 குடிநீர் இணைப்புகள் உள்ளன. இதுதவிர, 3 ஆயிரத்து 91 ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு அவற்றில் 679 கைப்பம்புகள், 2,412 மின் மோட்டார்கள் மூலம் தினமும் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. ஆனால் ஒருசில இடங்களில் சட்டவிரோதமாக மின்மோட்டார்கள் மூலம் குடிநீரை உறிஞ்சி வீடுகளில் உள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளில் நிரப்பி வருவதாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தது.

இதையடுத்து மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் நேற்று சூரமங்கலம் மண்டலத்திற்கு உட்பட்ட 20-வது வார்டு ராமலிங்கா நகர் பகுதியில் திடீரென ஆய்வு செய்தார். அப்போது, பொது குடிநீர் குழாய்கள் மற்றும் வீட்டு குடிநீர் இணைப்புகளிலிருந்து சட்ட விரோதமாக மின் மோட்டார்கள் மூலம் குடிநீரை உறிஞ்சி, வீடுகளிலுள்ள மேல்நிலை நீர்தேக்க தொட்டிகளில் நிரப்புவது கண்டறியப்பட்டது. இதையடுத்து அந்த மின் மோட்டார்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து மாநகராட்சி ஆணையாளரின் உத்தரவுப்படி மாநகரில் உள்ள அனைத்து வார்டுகளிலும் பொறியியல் பிரிவு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஆகியோர் மின் மோட்டார்கள் மூலம் குடிநீர் உறிஞ்சப்படுகிறதா? என தீவிரமாக கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டனர்.

அப்போது வீட்டு குடிநீர் இணைப்புகள், பொது குடிநீர் குழாய்கள் மற்றும் வணிக ரீதியான குடிநீர் இணைப்புகளில் சட்ட விரோதமாக மின் மோட்டார்களை கொண்டு குடிநீர் உறிஞ்சுவோர்களை கண்டறிந்து அவர்கள் பயன்படுத்திய 56 மின் மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டன..

Next Story