விக்கிரமசிங்கபுரத்தில் நூதன முறையில் பெண்ணிடம் நகை அபேஸ்
விக்கிரமசிங்கபுரத்தில் நூதன முறையில் பெண்ணிடம் நகை அபேஸ் செய்த வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
விக்கிரமசிங்கபுரம்,
விக்கிரமசிங்கபுரத்தில் நூதன முறையில் பெண்ணிடம் நகை அபேஸ் செய்த வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
ஜோதிடம் பார்ப்பதாக கூறி...
நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் சத்திரம் தெருவைச் சேர்ந்தவர் மூக்கன் (வயது 45) கூலி தொழிலாளி. இவருடைய மனைவி வனஜா (37). நேற்று காலையில் வழக்கம்போல் மூக்கன் கூலி வேலைக்கு சென்று விட்டார். மதியம் வனஜா மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அந்த தெரு வழியாக வந்த வாலிபர், தன்னை ஜோதிடராக கூறிக் கொண்டு, வனஜாவிடம், உங்களுக்கு கிரக தோஷம் உள்ளது. அதனை சரி செய்ய வேண்டும் என்று கூறினார்.
இதனை உண்மை என்று நம்பிய வனஜா, அந்த வாலிபரிடம் பேசினார். அப்போது வனஜாவிடம் தோஷத்தை கழிப்பதாக கூறிய அந்த வாலிபர், வனஜாவிடம் ஒரு சொம்பில் தண்ணீர் கொண்டு வருமாறு கூறினார். அப்போது வனஜா கொண்டு வந்த தண்ணீரில், மயக்க பொடியை கலந்த அந்த வாலிபர், அந்த தண்ணீரை குடிக்குமாறு வனஜாவிடம் கூறினார்.
நூதன முறையில்
அந்த தண்ணீரை குடித்ததும், சற்று மயக்க நிலைக்கு சென்ற வனஜாவிடம், தோஷத்தை முழுவதுமாக கழிக்க ஏதேனும் ஒரு நகையை எடுத்து வருமாறு கூறினார். உடனே வனஜா தனது வீட்டில் உள்ள பீரோவை திறந்து, அதில் இருந்த 3 பவுன் தங்க சங்கிலியை எடுத்து வந்து, அந்த வாலிபரிடம் கொடுத்தார். அந்த நகையை பெற்று கொண்ட அந்த வாலிபர் அங்கிருந்து சென்று விட்டார்.
சிறிதுநேரத்தில் மயக்கம் தெளிந்த வனஜா, தன்னிடம் மர்மநபர் 3 பவுன் நகையை நூதன முறையில் அபேஸ் செய்ததை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்த புகாரின்பேரில், விக்கிரமசிங்கபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பெண்ணிடம் நூதன முறையில் நகையை பறித்து சென்ற மர்மநபரை வலைவீசி தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story