அருணாசலபிரதேச விபத்தில் பலியான, விமானப்படை வீரரின் உடல் கோவை வந்தது - குண்டுகள் முழங்க தகனம்
அருணாசலபிரதேச விபத்தில் பலியான விமானப்படை வீரரின் உடல் நேற்று கோவை கொண்டு வரப்பட்டு குண்டுகள் முழங்க தகனம் செய்யப்பட்டது.
சிங்காநல்லூர்,
அசாம் மாநிலம் ஜோர்கட் விமானப்படை நிலையத்தில் இருந்து அருணாசலபிரதேச மாநிலத்தில் உள்ள மென்சுகா விமானப்படை தளம் நோக்கி கடந்த 3-ந் தேதி இந்திய விமானப்படையின் ஏ.என். 32 ரக விமானம் பறந்து சென்றபோது மாயமானது. அந்த விமானத்தை தேடும் பணி முடுக்கி விடப்பட்டது. தீவிர தேடுதல் வேட்டைக்கு பிறகு அந்த விமானம் அருணாசலபிரதேச மாநிலத்தில் உள்ள சியாங் மாவட்டத்தில் விழுந்து நொறுங்கியது கண்டுபிடிக்கப்பட்டது. அதில் பயணம் செய்த 13 பேரும் பலியானது உறுதியானது. அவர்களில் ஒரு வீரர் கோவையை சேர்ந்த வினோத்ஹரிகரன் (வயது 32) என்பது தெரியவந்தது. அவரது உடல் நேற்றுக்காலை கோவையை அடுத்த சூலூர் விமானப்படைக்கு சிறப்பு விமானம் மூலம் கொண்டு வரப்பட்டது. இந்திய விமானப்படை தலைமை தளபதி மற்றும் தென்பிராந்திய தளபதி சார்பாகவும் சூலூர் 43-வது விங் கமாண்டர் ஏர்கமோடர் ஏ.கே.கும்தாக் பேகர் ஆகியோர் வினோத் ஹரிகரன் உடலுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்கள்.
அதன்பின்னர் வினோத் ஹரிகரனின் உடல் ராணுவ வண்டியில் கோவை திருச்சி சாலை சிங்காநல்லூரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்புக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு அவரது உடலுக்கு விமானப்படை வீரர்கள் மற்றும் தேசிய மாணவர் படையினர் அஞ்சலி செலுத்தினார்கள். அதைத்தொடர்ந்து சிங்காநல்லூர் சாந்தி கியர்ஸ் மின் மயானத்தில் குண்டுகள் முழங்க இறுதி மரியாதை செலுத்தப்பட்டு உடல் தகனம் செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சியின்போது விமானப்படை அதிகாரி ஒருவர், கோவை வீரர் வினோத் ஹரிகரனின் சீருடையை அவரது மனைவியிடம் அரசு மரியாதை செலுத்தி ஒப்படைத்தார். அந்த காட்சி காண்போர் அனைவரையும் கண்கலங்க செய்தது.
விமான விபத்தில் பலியான வினோத் ஹரிகரன் கேரளாவை சேர்ந்தவர். இவர் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பி.இ. எலக்டிரானிக்ஸ் அண்டு எலக்டிரிக்கல் என்ஜினீயரிங் படித்துள்ளார். கடந்த 2010-ம் ஆண்டு விமானப்படையில் சேர்ந்தார். விமானப்படையில் விமானியாக பணியாற்றி வந்தார்.
Related Tags :
Next Story