விழுப்புரத்தில், தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் 12 பவுன் நகை திருட்டு - 2 வாலிபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
விழுப்புரத்தில் தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் 12 பவுன் நகையை திருடிச்சென்ற 2 வாலிபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
விழுப்புரம்,
விழுப்புரம் சாலாமேடு தந்தை பெரியார் நகர் பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ் குமார் (வயது 40). இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி மலர்கொடி (37). இவர் தந்தை பெரியார் நகர் பகுதியில் உள்ள ஒரு டிராக்டர் கம்பெனியில் பணியாற்றி வருகிறார்.
இவர் நேற்று காலை தனது வீட்டை பூட்டிவிட்டு வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டார். பின்னர் மதியம் உணவு சாப்பிடுவதற்காக மலர்கொடி, வீட்டிற்கு சென்றார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு திடுக்கிட்டார். உடனே வீட்டிற்குள் சென்றபோது 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர், வீட்டின் பின்பக்க கதவை திறந்து வெளியே ஓடினார்.
இதை பார்த்த மலர்கொடி, திருடன்... திருடன்... என்று கூச்சல்போட்டார். அதற்குள் அந்த வாலிபர், அங்கு ஏற்கனவே மோட்டார் சைக்கிளில் தயாராக நின்றுகொண்டிருந்த மற்றொரு வாலிபருடன் ஏறி தப்பிச்சென்று விட்டார். பின்னர் மலர்கொடி, தனது வீட்டின் படுக்கை அறைக்கு சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் வைக்கப்பட்டிருந்த 12 பவுன் நகை திருட்டு போயிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதன் மதிப்பு ரூ.2½ லட்சமாகும்.
இதுகுறித்து மலர்கொடி கொடுத்த புகாரின்பேரில் விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பிச்சென்ற 2 வாலிபர்களையும் வலைவீசி தேடி வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த துணிகர திருட்டு சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story