பாலியல் வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க வேண்டும் சவுமியா அன்புமணி வலியுறுத்தல்


பாலியல் வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க வேண்டும் சவுமியா அன்புமணி வலியுறுத்தல்
x
தினத்தந்தி 22 Jun 2019 4:30 AM IST (Updated: 22 Jun 2019 2:50 AM IST)
t-max-icont-min-icon

பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை ஒழிக்க, குற்றவாளிகளுக்கு ஒரு மாதத்தில் தண்டனை வழங்கும் வகையில் பாலியல் வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க வேண்டும் என்று சவுமியா அன்புமணி வலியுறுத்தி உள்ளார்.

சென்னை,

சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பா.ம.க.வின் பாட்டாளி இளம்பெண்கள் சங்கம் சார்பாக பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று காலை நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு பா.ம.க. பொருளாளர் ம.திலகபாமா தலைமை தாங்கினார். ‘பசுமைத் தாயகம்’ அமைப்பின் தலைவர் சவுமியா அன்புமணி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்.

ஆர்ப்பாட்டத்தில் பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, இணை பொதுச்செயலாளர் ஏ.கே.மூர்த்தி, மாவட்ட அமைப்புச் செயலாளர் ஜெயராமன் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் முகத்தில் கருப்பு மற்றும் வெள்ளை வண்ணங்களை பூசியபடி கலந்துகொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் போது சவுமியா அன்புமணி, நிருபர்களிடம் கூறியதாவது:-
இன்றைய காலகட்டத்தில் 9 வயது சிறுமியை கடத்தி 10 நாள் வைத்துக்கொண்டு தூக்கி எறியும் நிலைமை சமுதாயத்தில் உள்ளது. சமுதாயத்தில் நடக்கும் இதுபோன்ற பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளை ஒழிக்க வேண்டுமானால் பாலியல் வழக்குகளை விசாரிக்க தனியாக சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க வேண்டும். இந்த நீதிமன்றங்களில் நடத்தப்படும் பாலியல் வழக்குகளுக்கு ஒரு மாதத்தில் தீர்ப்பு வழங்கி தண்டனை அளிக்கப்பட வேண்டும்.

குறிப்பாக கூட்டுப் பாலியல் வன்முறை செய்யும் மிருகங்கள் உடனடியாக தண்டிக்கப்பட வேண்டும். அவர்களுக்கு அதிகபட்சமாக மரண தண்டனை கூட வழங்கலாம். இதுபோன்று கடுமையான தண்டனைகளும், சட்டமும் இருந்தால் மட்டுமே பாலியல் வன்முறைகளும், சீண்டல்களும் நடைபெறாமல் தடுக்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

Next Story