ஈரோட்டில் ரூ.16 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்; அதிகாரிகள் நடவடிக்கை


ஈரோட்டில் ரூ.16 லட்சம் புகையிலை பொருட்கள் பறிமுதல்; அதிகாரிகள் நடவடிக்கை
x
தினத்தந்தி 21 Jun 2019 10:30 PM GMT (Updated: 21 Jun 2019 9:23 PM GMT)

ஈரோட்டில் ரூ.16 லட்சம் புகையிலை பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்தனர்.

ஈரோடு,

ஈரோடு கருங்கல்பாளையம் பச்சையம்மன் கோவில் வீதியில் ஒரு குடோனில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட கலெக்டர் சி.கதிரவனுக்கு புகார் வந்தது. இதைத்தொடர்ந்து அவர் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அவரது உத்தரவின் பேரில் ஈரோடு மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அதிகாரி கலைவாணி மற்றும் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட குடோனுக்கு நேற்று சென்று சோதனை மேற்கொண்டனர்.

அப்போது தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் குடோனில் அட்டை பெட்டிகளில் அடுக்கி வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மொத்தம் 1,600 கிலோ புகையிலை பொருட்கள் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.16 லட்சம் ஆகும்.

இதைத்தொடர்ந்து குடோன் உரிமையாளரான சக்திவேல் (வயது 45) என்பவரிடம், அதிகாரிகள் புகையிலை பொருட்கள் எங்கிருந்து வாங்கப்பட்டது என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதுகுறித்து உணவு பாதுகாப்புத்துறை நியமன அதிகாரி கலைவாணி கூறும்போது, `தமிழக அரசால் தடை செய்யப்பட்டு உள்ள புகையிலை பொருட்களை யாரேனும் விற்பனை செய்தால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.

Next Story