விவசாய நிலங்களுக்குள் வனவிலங்குகள் வராமல் இருக்க அகழி அமைக்க வேண்டும்; வேளாண் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கோரிக்கை


விவசாய நிலங்களுக்குள் வனவிலங்குகள் வராமல் இருக்க அகழி அமைக்க வேண்டும்; வேளாண் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கோரிக்கை
x
தினத்தந்தி 22 Jun 2019 4:15 AM IST (Updated: 22 Jun 2019 2:53 AM IST)
t-max-icont-min-icon

விவசாய நிலங்களுக்குள் வனவிலங்குகள் வராமல் இருக்க அகழி அமைக்க வேண்டும் என்று வேளாண் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

ஈரோடு,

ஈரோடு மாவட்டத்தில் வேளாண் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்டரங்கில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் சி.கதிரவன் தலைமை தாங்கினார். காலை 10 மணி முதல் 11.30 மணி வரை விவசாயிகள் மனுக்கள் கொடுத்தனர். அதைத்தொடர்ந்து விவசாய சங்க பிரதிநிதிகள் பேசும்போது கூறியதாவது:-

கீழ்பவானி வாய்க்கால் முழுவதும் பராமரிப்பின்றி புதர் மண்டிக்கிடக்கிறது. எனவே பொதுப்பணி துறையினர் அதிக கவனம் செலுத்தி சீரமைப்பு பணிகளை விரைவில் தொடங்க வேண்டும். மேலும் தலைமை பகிர்வு கிளை வாய்க்கால்கள் பல இடங்களில் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளது. இந்த ஆக்கிரமிப்புகளை கண்டறிந்து உடனடியாக மீட்டு எல்லையில் பனை மரம் நடவு செய்ய வேண்டும்.

பெருந்துறை கூட்டு குடிநீர் திட்டத்தை பொருத்தவரையில் பவானிசாகர் அணையில் இருந்து குழாய் பதித்து குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது. இதன் மூலம் சுத்தமான குடிநீர் பெருந்துறை பகுதியை சேர்ந்த பொதுமக்களுக்கு வழங்க முடியும். பவானிசாகர் அணையின் நீர் இருப்பு குறைவாக உள்ளது. எனவே பொதுப்பணித்துறையினர் எச்சரிக்கையுடன் செயல்படவேண்டும்.

குடிமராமத்து பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இதனை முறையாக செயல்படுத்துவதற்காக அதில் ஒப்பந்தம் செய்பவர்கள் பணிகளை கமிட்டி அமைத்து நடைமுறைப்படுத்த வேண்டும். சிவகிரி ஒழுங்குமுறை விற்பனைக்கூட அலுவலகம் பழுதடைந்த நிலையில் உள்ளது. கடந்த வாரத்தில் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 2 விவசாயிகளுக்கு தலையில் காயம் ஏற்பட்டது. எனவே இதனை உடனடியாக சரி செய்ய வேண்டும். மேலும் அலுவலகத்தில் குடிநீர், கழிப்பறை வசதிகளையும் ஏற்படுத்தி கொடுக்க வேண்டும்.

அரசு மானிய விலையில் விவசாயிகளுக்கு டிராக்டர் வழங்கி வருகிறது. இவைகள் முறையாக பராமரிக்கப்படாமல் உள்ளது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சூறாவளி காற்றால் பல லட்சம் வாழைகள் சாய்ந்து விவசாயிகள் பாதிப்பு அடைந்துள்ளனர். அவர்களுக்கு உரிய நிவாரணம் வழங்கவேண்டும். பால் கூட்டுறவு சங்கங்களில் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக பணம் வழங்கப்படாமல் உள்ளது. சக்தி சர்க்கரை ஆலை ரூ.11 கோடி விவசாயிகளுக்கு பாக்கி வைத்து உள்ளது. இதனை உடனடியாக வழங்க வேண்டும்.

தடப்பள்ளி -அரக்கன்கோட்டை பகுதிகளில் குடிமராமத்து பணிகளுக்காக ரூ.3 கோடியே 6 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதனை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு கிளை சங்கங்கள் போன்றவற்றின் மேற்பார்வையில் இந்த பணிகளை செயல்படுத்த வேண்டும். மேலும் இதை காரணம் காட்டி விவசாயிகளுக்கு தண்ணீர் திறப்பு நிறுத்தக்கூடாது. இதுகுறித்து முழுமையான விளக்கங்களை பொதுப்பணித்துறையினர் வழங்க வேண்டும்.

இணைய தளம் மூலமாக பட்டா மாறுதல் செய்ய விவசாயிகள் விண்ணப்பித்து உள்ளனர். இந்த நிலையில் பட்டா மாறுதல் பெற்று வந்த பின்னர் மாறுதலில் சில ஆவணங்கள் இல்லை என மீண்டும் மீண்டும் அலைக்கழிக்கப்பட்டு வருகிறார்கள். இதற்கு தீர்வு காண வேண்டும். விவசாயிகளுக்கு ஓய்வூதியம் திட்டத்தை நடைமுறை் படுத்தப்பட வேண்டும். கூட்டுறவு சங்கங்கள் மூலம் பருத்தி ஏலம் பூதப்பாடி, அந்தியூர் போன்ற பகுதிகளில் நடைபெற்று வருகிறது. இந்த ஏல முறையை பொருத்தவரையில் அன்னூர், மூலனூர், சத்தியமங்கலம் ஆகிய 3 பகுதிகளில் மட்டும் மறைமுக ஏலம் கிடையாது என அறிவித்து வருகிறார்கள் எனவே விவசாயிகளுக்கு பயன் தரும் மறைமுக ஏலத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.

பவானிசாகர் அணையில் இருந்து பவானி ஆற்றில் தண்ணீர் திறப்பு எந்தெந்த விகிதத்தில் திறக்கப்படுகிறது என கேட்டு, பொதுப்பணித் துறையினருக்கு பலமுறை கடிதம் கொடுக்கப்பட்டும் இதுவரை எதற்கும் சரியான பதில் அளிக்கப்படவில்லை. மாறாக வேலை நேரத்தில் கேள்விகளுக்கு பதில் கூற முடியாது என கூறி கடிதங்கள் வந்துள்ளது.

காலிங்கராயன் பாசனத்திற்கு ஆண்டுதோறும் ஜூன் மாதம் 16-ந்தேதி முதல் ஏப்ரல் மாதம் 30-ந்தேதி வரை தண்ணீர் திறக்கப்படும். ஆனால் தற்போது தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனால் மஞ்சள் பயிரிட முடியாமல் விவசாயிகள் தவித்து வருகிறார்கள். உரம், பூச்சி கொல்லி மருந்து போன்ற விவசாய இடுபொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்து விட்டது. ஆனால் நெல், கரும்பு, மஞ்சள், வாழை போன்ற பயிர்களுக்கு கட்டுப்படியான விலை கிடைக்காமல் விவசாயிகள் தற்கொலையை நோக்கி செல்லும் சூழ்நிலை உருவாகியுள்ளது. எனவே எம்.எஸ்.சாமிநாதன் குழு பரிந்துரையை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.

கடந்த சில ஆண்டுகளாக மஞ்சள் விலை கடுமையாக வீழ்ச்சி அடைந்து உள்ளது. எனவே அரசு ஒரு குவிண்டால் மஞ்சளை ரூ.15 ஆயிரத்துக்கு கொள்முதல் செய்ய வேண்டும். ஈரோடு மாநகரில் மஞ்சள் தொழிற்சாலை ஒன்றும் ஏற்படுத்த வேண்டும். பர்கூர், ஆலத்தூர் போன்ற மலைக்கிராமங்களில் குடிநீர் பிரச்சினை உள்ளது. இதனை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மேலும் வன விலங்குகள் விவசாய நிலங்களுக்குள் வராமல் இருக்க அகழி அமைத்து கொடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Next Story