அனுமதியின்றி மணல் அள்ளிய 5 பேர் கைது; வாகனங்கள் பறிமுதல்


அனுமதியின்றி மணல் அள்ளிய 5 பேர் கைது; வாகனங்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 22 Jun 2019 3:37 AM IST (Updated: 22 Jun 2019 3:37 AM IST)
t-max-icont-min-icon

அனுமதியின்றி மணல் அள்ளிய 5 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் மணல் அள்ள பயன்படுத்திய வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

பேரையூர்,

பேரையூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணி மற்றும் போலீசார் அணைக்கரைப்பட்டி எத்திலா மலையடிவாரப்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர். அப்போது அந்த பகுதியில் அரசு அனுமதி இல்லாமல் டிப்பர் லாரி மற்றும் டிராக்டரில் செம்மண் அள்ளிக்கொண்டு இருந்தவர்கள் போலீசாரை பார்த்தவுடன் தப்பி ஓடினார்கள்.

அதில் அணைக்கரைப்பட்டியை சேர்ந்த ராஜா (வயது 23), தொட்டனம்பட்டியை ேசர்ந்த செல்வம்(25) ஆகியோர் போலீசாரிடம் பிடிபட்டனர். பின்னர் டிப்பர் லாரி, டிராக்டர் ஆகியவற்றை பறிமுதல் செய்து சாப்டூர் போலீஸ் நிலையம் கொண்டு வந்தனர். இது குறித்து சாப்டூர் போலீசார் வழக்குபதிவு செய்து ராஜா, செல்வத்தை கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய சுரேஷ், பாண்டி, முத்துராஜ், தர்மா ஆகியோரை தேடி வருகின்றனர்.

இதேபோல் வில்லூர் போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மறவபட்டி-கோபாலபுரம் சாலையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது கோபாலபுரத்தை சேர்ந்த பிச்சைமுத்து(40) என்பவர் அனுமதியின்றி டிராக்டரில் மணல் அள்ளி கொண்டு வரும்போது போலீசாரிடம் சிக்கினார். உடனே போலீசார் டிராக்டரை பறிமுதல் செய்து வில்லூர் போலீஸ் நிலையம் கொண்டு வந்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து பிச்சைமுத்துவை கைது செய்தனர்.

திருமங்கலம் அருகே உள்ள கள்ளிக்குடி-விருதுநகர் நான்குவழிச்சாலையில் காரியாபட்டி விலக்கில் கள்ளிக்குடி போலீசார் வாகன சோதனை நடத்தினர். அப்போது அந்த வழியாக வந்த 2 லாரிகளை மடக்கிப்பிடித்து விசாரணை நடத்தினர். மேலும் லாரிகளில் சோதனை நடத்தியபோது, அதில் அனுமதியின்றி மணல் அள்ளப்பட்டு இருப்பது தெரியவந்தது. இதைதொடர்ந்து லாரிகளை பறிமுதல் செய்ததுடன், மம்சாபுரத்தை சேர்ந்த ராமச்சந்திரன்(28), விஜய குமார்(26) ஆகிேயாரை கைது செய்தனர்.

Next Story